நாம் தமிழர் கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக்  கண்டித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருக்கு நாம் தமிழர் ஒருங்கினைப்பாளர் சீமான் நன்றி தெரிவத்துள்ளார்.   


தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,திமுகவினர் சிலர் வன்முறையில் இறங்கிய சம்பவம் பேசும் பொருளானது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    


முன்னதாக, மொரப்பூர் மேடை பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவான், " கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. திமுக தலைமை இதுபோன்ற செயல்களை அங்கீகரிக்காது என்று நினைக்கிறேன் " என்று தெரிவித்தார். இதனையடுத்து, சட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், " அரசு நடவடிக்கை எடுக்கும்... எடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.      


 






 


இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சீமான், " நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், முனைவர் திருமாவளவனுக்கு எனது அன்பும், நன்றியும்' என்று பதிவிட்டுள்ளார். 


முன்னதாக, மோரூர் பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்த காவல்துறையின் ஒருசார்பு நிலையிலான பாகுபாட்டையும் சாதி வெறியர்களையும் கண்டித்த சீமானுக்கும், எஸ்டிபிஐ தலைவர்  நெல்லை முபாரக்-க்கும் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  



 


எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி!


அதேபோன்று, மொரப்பூர் மேடை பிரச்சனைக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். 


 






 


இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், " தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத்திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட  சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எனது அன்புகலந்த நன்றியும், வணக்கமும்!" என்று பதிவிட்டுள்ளார்.