தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சீமான் எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
பேனா நினைவுச்சின்னம்:
ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள இந்த பேனா சின்னத்திற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவைப்படும் திட்டங்களை பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் மதிப்பீடு குழு ஏப்ரல் 17ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டது. அதன் பின்னர் தற்போது மதிபீட்டுக் குழுவின் பரிந்துரையை அடுத்து மத்திய அரசு நிபந்தனைகளுட்ன அனுமதி அளித்துள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன?
- பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
- நினைவுச் சின்னம் அமைக்க எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது.
- நினைவுச் சின்ன திட்டத்தினை செயல்படுத்தும் போது 15 பேர்கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படவேண்டும்.
- கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்குட்பட்டு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Pen Monument Rules: பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசின் நிபந்தனைகள் என்னென்ன? முழு விவரம்