கோவையில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு 7 அடியில் வெண்கல சிலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 7 அடி உயரமுள்ள சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழன்:
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர். ஆங்கிலேயர்கள் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
ஆங்கிலேய அரசால் தேச துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை காலத்தில் செக்கு இழுப்பது போன்ற பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு குற்றவியல் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவையில் சிலை:
அவர் நாட்டுக்காக செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிக்கு கோவையில் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் சிலை அமைக்க ஒதுக்கப்பட்டது. இடம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சிலை நிறுவுவதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், ”ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித் துறையின் சார்பில், வ.உ.சி-க்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 4 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
முதலமைச்சர்:
மேலும் வ.உ. சிதம்பரம் பிள்ளையில் சிலை அமைப்பதற்காக சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்தில் இருந்து பொருட்கள் பெறப்பட்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என நிர்வாகிகள் கூறியுள்ளனர். வ.உ சிதம்பரம் பிள்ளையின் சிலையை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
SS Chakravarthy Passes Away: பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார் - ரசிகர்கள் இரங்கல்
Pen Monument: கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!