கோவை ராமநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்பது கொள்கை முடிவு. இந்திய கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் தேர்தல் உடன்பாடு கிடையாது. நாம் தமிழரை விட 30 விழுக்காடு கூடுதலாக பாஜக வாக்குகளை வாங்கும் என அண்ணாமலை சொன்னதை வரவேற்கிறேன். நான் 7 விழுக்காடு வாக்குகளை வைத்துள்ளேன். அதனால் 37 விழுக்காடு வாக்குகளை பெற முடியுமென்றால், அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர தேவையில்லை. தனித்து நின்று வென்று ஆட்சியமைத்து விடலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு, ஐந்து மாதங்களே இருப்பதால், அப்போது என்ன நடக்கிறது என பார்க்கலாம்.


வெறுப்பின் விதை, செடி, கொடி, காய், பூ எல்லாம் பாஜக தான். நான் பேசும் மொழி, இன அரசியல் வெறுப்பு எனில், மொழிவாரி மாநிலங்கள் எதற்கு?இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை எதிர்த்து பேசுவது வெறுப்பு அரசியல் இல்லையா? வெறுப்பு அரசியலைப் பற்றி பாஜக பேசக்கூடாது. வயிறு காய்ந்து இருக்கும் போது, வானியியல் ஆய்வு எதற்கு? 20 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்கப்போகிறார்கள் என ஆய்வு சொல்கிறது. 80 கோடி ஏழை மக்கள் உள்ளனர். இந்த சூழலில் சூரியன், சந்திரனில் எதற்கு ஆய்வு நடத்த வேண்டும்? இருக்கும் ஒரு பூமியை காப்பாற்ற வக்கில்லை. இங்கு குடிக்க தண்ணீர் இல்லாத போது, நிலாவில் தண்ணீர் இருக்கிறதா என எதற்கு ஆய்வு நடத்த வேண்டும்?


திமுக உடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை. பெரியாரிய, திராவிட இயக்கங்களில் வளர்ந்தவன் நான். திமுக, அதிமுக உடன் எங்களுக்கு நடப்பது சகோதர சண்டை. திராவிடத்தை ஒழிக்க வேண்டுமென்பது எனது எண்ணமல்ல. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டுமென்பதே என் கனவு. தமிழ் தேசியம் என்பதே சாதி ஒழிப்பு தான். மொழிப்பற்று, இனப்பற்று வளர்க்கும் போது சாதி, மத உணர்வு, சனாதனம் ஒழியும்” எனத் தெரிவித்தார்.
விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் ஆவேசமடைந்தார். அப்போது பேசிய அவர், “எனது தகுதியை தீர்மானிக்க நீ யார்? என்னை கேள்வி கேட்கும் விஜயலட்சுமி என்ன அன்னை தெரசா? அன்னி பெசண்ட் அம்மையாரா?, ஐரோம் சர்மிளாவா?. என்னதையாவது பிடித்து வந்து கேள்வி கேட்கக்கூடாது. நீங்கள் கேள்வி தான் கேட்க வேண்டும். கேவலங்களை கிளரக்கூடாது. இதையே எத்தனை வருசம் பேசுவீர்கள்? என்னைப் பற்றி பேச அவளுக்கு என்ன தகுதியுள்ளது? எதையாவது பேசக்கூடாது.




எனக்கும், அவருக்கும் திருமணமானதற்கு ஒரு சான்று உள்ளதா? எனக்கு முன்பு எத்தனை பேருடன் விஜயலட்சுமி திருமணம் செய்தார்? அதைப்பற்றி ஏன் கேள்வி கேட்கமாட்டீர்கள்? நான் மக்களுக்காக போராடுவதா? அல்லது விஜயலட்சுமியை எதிர்த்து போராடுவதா? நான் செய்ய வேண்டும்? குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் பேச வேண்டும். 2011 ல் புகார் அளித்தவர் ஏன் திரும்ப பெற்றார்? தேர்தல் வரும் போது எல்லாம், புகாரளிக்க வருகிறார். அறிவு உள்ளவர் போல ஆளுநர் பேசவில்லை. திருவள்ளுவர் காலத்தில் இந்து என்ற சொல்லே இல்லை. இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்தால் தேர்தலில் போட்டியிடாமல் திமுகவை ஆதரிக்கிறேன் என சொல்லியுள்ளேன். காங்கிரசை விட பெரிய கட்சி நாம் தமிழர். பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் நேரடியாக திமுக அவரை எதிர்த்து போட்டியிட்டால், நான் போட்டியிடாமல் விலகி திமுகவை ஆதரிக்கிறேன்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் அண்ணாமலை இந்தியா ஒரே நாடா என சொல்லட்டும்? பல நாடுகளின் ஒன்றியம் தான் இந்தியா. இந்தியாவின் ஒற்றுமை என்பது வெள்ளைக்காரனின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடத்தி காட்டட்டும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய 4 பேரும் எனக்கு எதிரி தான். காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஊழல் கட்சி தான். இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை வேறுபாடு இல்லை. அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசுவது அருவருக்கத்தக்கது. என் சொத்து மதிப்பு 1500 கோடி என சொன்னார்கள். பெண்ணை வைத்து அசிங்கப்படுத்தி அவதூறு பரப்ப பார்க்கிறார்கள். இதற்கு எல்லாம் பயப்படக்கூடிய ஆளா நான்? வீரலட்சுமிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் உள்ளது? விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி டப்பிங்கா? இந்தியா என்ற பெயரை வெள்ளைக்காரன் வைத்தான். இந்தியா என்ற பெயரை எடுத்து விடுங்கள். அதேபோல வெள்ளைக்காரன் வைத்த இந்து என்ற பெயரை எடுத்து விட்டு புதிய பெயர் வையுங்கள். இந்தியா எந்த நாட்டுடனும் பகை நாடாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான், பங்காளதேஷ் உடன் பகை நாடாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.


சீமான் கைது செய்யப்படலாம் என பரவி வரும் தகவல் குறித்த கேள்விக்கு, “ஐ ஆம் வையிட்டிங். இந்த வேலைக்கு வரும் போதே வாய்க்கரசி போட்டு வந்தவன்” எனப் பதிலளித்தார்.