யார் ஆட்சிக்கு வரவேண்டாம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக நிர்வாகி மனோகரன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன்பிறகு உரையாற்றிய அவர், “ சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்றியது போல இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். திமுகவில் வாரிசு உள்ளது என கூறுகின்றனர். கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவிற்கு தலைவராக நியமித்து குடியரசு தலைவர் பதவியை கொச்சைப்படுத்தி உள்ளனர். பலிகடா ஆகப்போகிறோம் என தெரியாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்கிறது அதிமுக.
இந்தியா கூட்டணி கூட்டங்களை பார்த்து அச்சம் கொண்ட பாஜக நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது. ” என தெரிவித்தார்.
” இன்றைக்கு நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எவ்வாறு சட்டமன்றத்தில் தேர்தல் நடந்தபோது தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு - நம்முடைய கூட்டணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தீர்களோ, அதே போல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன், யார் பிரதமராக வரவேண்டும்? யார் ஆட்சிக்கு வரவேண்டும்? என்பதல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம்முடைய இலட்சியமாக - நோக்கமாக இருக்க வேண்டும்.
எனவே இந்தியா என்று சொன்னாலே இன்றைக்கு நிறைய பேருக்கு பயம் ஆகிவிட்டது. அதிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அச்சமே ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்ற பெயரைச் சொல்வதற்கே கூச்சப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள்.
இந்தியா கூட்டணி அமைத்து முதன் முதலில் பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் அவர்கள், பா.ஜ.க. ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி பாட்னாவில் ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்தோம். அதற்கு பின்னால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மீண்டும் இரண்டாவது முறையாகக் கூடி இந்தக் கூட்டணிக்கு ‘இந்தியா‘ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து, அதை அறிவித்து, அதற்குப் பிறகு மராட்டிய மாநிலம் மும்பையில் மூன்றாவது கூட்டத்தை நடத்தி, நம்முடைய கூட்டங்கள் எப்படி செயல்பட வேண்டும், அப்படி செயல்படுவதற்கு என்னென்ன அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், தேர்தல் களத்தில் நாம் எப்படி ஈடுபட வேண்டும், பிரச்சாரத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி எல்லாம் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்பதற்காக அதற்கென்று சில குழுக்கள் எல்லாம்கூட அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம்.” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
”பலிகடா ஆகப் போவதை உணராமல் அதிமுக ஒரே நாடு,ஒரே தேர்தலை ஆதரிக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தபோது ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்த அதிமுக இப்போது ஆதரிக்கிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தில் இன்னும் ஆட்சி முடியவில்லை. இன்னும் 2.5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி உள்ள நிலையில் ஆட்சியை கலைப்பீர்களா? நாட்டின் அதிபராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். தவிர நாட்டின் நிலை குறித்து நினைக்கவில்லை. தேர்தல் செலவை குறைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்கிறார்கள். முதலில் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். இந்தியாவையும், கழகத்தையும் காக்க நீங்கள் அனைவரும் உறுதிமொழியேற்க வேண்டும்.” என்றார்.