காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து முகூர்த்த நாள் மற்றும் வாத இறுதி நாள் காரணமாக ஏராளமான பயணிகள் பாஸ் நிலையத்தில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல். சென்னை, தாம்பரம் ,வேலூர், வந்தவாசி ,செய்யாறு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாள்
தமிழ்நாடு முழுவதும் இன்று முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாள் இருப்பதால், ஏராளமான பொதுமக்கள் திருமண விழாவில் பங்கு கொள்வதற்கும், பிற பயணங்கள் செய்வதற்கும், நேற்று மாலை முதலே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குவிய தொடங்கினர். இதன் காரணமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புறப்பட்ட பெரும்பாலான பேருந்துகள் கூட்ட நெரிசலுடனே காணப்பட்டது. பேருந்து முழுவதுமாக பயணிகளால் நிரம்பி வழிந்தன.
நிரம்பி வழிந்த காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ( kanchipuram bus stand )
சென்னை, தாம்பரம் , வேலூர் வந்தவாசி ,செய்யாறு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அதேபோன்று போதிய பேருந்துகள் இல்லாததால், அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்துடன் பயணம் செய்ய வந்த நபர்கள் பெரும்பாலானோர் பல பேருந்துகளில் ஏற முடியாமல் தவித்தனர். பலரும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி சென்ற காட்சிகளையும் காண முடிந்தது.
விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களின் பொழுது, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், இந்தநிலை தொடர்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பயணிகள் சிலர் தெரிவிக்கையில், சில பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில ஊர்களுக்கு பேருந்துகளில் இயக்கப்படுவது கிடையாது. எந்த ஊர்களுக்கு பேருந்து தேவைப்படுகிறதோ, அது குறித்து முன்கூட்டியே ஆராய்ந்து, அதற்கு ஏற்றார்போல் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
போக்குவரத்தில் நெரிசலில் சிக்கிய காஞ்சி மாநகரம்
காஞ்சிபுரத்தில் அனைத்து திருமண மண்டபங்களிலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், காஞ்சிபுரம் மாநகரை நோக்கி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் எண்ணிக்கை இயல்பை விட அதிகரித்தது. இதன் காரணமாக சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், மார்க்கெட் பகுதி, காந்தி ரோடு ,தேரடி, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள், வெளியேறுவதற்கும் இந்த போக்குவரத்து நெரிசல் பெரும் தடையாக இருந்தது.
காவல்துறையினரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக எந்தவித குற்ற சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.