வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வனவிலங்குகள் சரணாலயம், தேசிய பூங்கா போன்றவற்றைச் சுற்றியுள்ள 1கி.மீ பரப்பளவினை ‘வன சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்’ என வரையறுத்து, அப்பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புகள், விளைநிலங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக மலை மற்றும் அதைச் சார்ந்த காடுகளில் வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
இயற்கையின் அருட்கொடையான காடுகள், மலைகள், அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட அனைத்தையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது மிகமிக அவசியமான தற்காலச் சூழலில், அதுகுறித்த வழக்கினை ஏற்று நடத்திய உச்சநீதிமன்றத்தின் அக்கறையும், முயற்சியும் வரவேற்கத்தக்கதே. எனினும் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது காடுகளையும், மலைகளையும் பாழ்படுத்தி அவற்றை அழிப்பவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியதாய் இருக்க வேண்டுமே தவிர, இயற்கையைப் பாதுகாக்கும் அரண்களைத் தகர்ப்பதாய் இருந்திடக் கூடாது.
மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற பெருங்குடி மக்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது.
உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தின் அருகிலேயே செயல்படுத்தப்படும் நாசகார நியூட்ரீனோ திட்டத்தை நிரந்தரமாகத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பதே மலைகளையும், காடுகளையும் பாதுகாக்கும் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
மாறாக அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும் மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிருந்து அப்புறப்படுத்த வழிவகுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவானது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மலைவாழ் மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களிருந்து அகற்றுவதன் மூலம், மறைமுகமாகத் தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மேலும் சீரழிக்கக்கவே இவ்வுத்தரவானது வாய்ப்பேற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
ஆகவே, வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டுமெனவும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை பாதுக்காக்க சிறப்புச் சட்டமியற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.