விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சென்னையில் மொத்தம் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை (ஆக.31) விநாயகர் சதுர்த்தி கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாட விரும்பி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை கருத்தில்கொண்டு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து முன்னதாகப் பேசிய போக்குவரத்து கழக அலுவலர்கள், ”தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தேவைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் இந்த சிறப்பு பேருந்து மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கப்படும்” என்றனர்.
நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சென்னை வந்து லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். பண்டிகைக் காலங்கள், தொடர் விடுமுறை நாள்களின்போது தான் இவர்களில் பெரும்பாலானோருக்கு விடுமுறை வழங்கப்படுவதால், கொத்து கொத்தாக இந்தக் காலங்களில் பயணிகள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு பயணிப்பர்.
இவர்களைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், தொடர் விடுமுறை நாள்களின் போது சிறப்பு பேருந்துகள் நாடு முழுவதும் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
முன்னதாக சுதந்திர தின தொடர் விடுமுறையின்போது பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மொத்தம் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.