Seeman on Hijab verdict: 'இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி' - ஹிஜாப் தீர்ப்பு குறித்து சீமான் பேச்சு

”கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி” - சீமான் கருத்து

Continues below advertisement

பள்ளிகளில் ஹிஜாப் அணிய கூடாது என்று அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் பள்ளிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Continues below advertisement

அதில், கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, ஹிஜாப் உடை உடுத்திச்செல்வதற்கு கர்நாடக மாநில அரசு விதித்துள்ள தடை செல்லுமென கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஹிஜாப் அணிவது இசுலாமிய மதவழக்கமென்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லையெனக் கூறியிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்பானது கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் காயப்படுத்துவதாக உள்ளது.

இராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான தொல்லியல் சான்றுகளோ, அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கைகளோ இல்லாதபோதும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை எனும் கற்பிதத்தை அடிப்படையாகக் கொண்டு, சட்டத்தின்படி அல்லாது நம்பிக்கையின்படி தீர்ப்பளித்து, இராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட இந்நாட்டில், பாராளுமன்றத்தைத் தாக்கினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவைக் குற்றவாளியென நிரூபிக்கவோ, தண்டனை வழங்கவோ ஆதாரங்களும், சாட்சியங்களும், அடிப்படை முகாந்திரமும்கூட இல்லாதபோதும், இந்தியாவின் கூட்டு மனசாட்சி பலியிட விரும்புகிறது எனக்கூறி, அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட இப்பெருந்தேசத்தில், ஹிஜாப் எனும் இசுலாமியர்களின் ஆடையுரிமைக்கு எத்தகைய முன்ஆதாரமும் இல்லையெனக் கூறியிருக்கும் நீதிமன்றத்தீர்ப்பானது இசுலாமியர்களுக்கு இந்நாட்டின் நீதிமன்றப்பரிபாலன அமைப்பு முறைகள் செய்யும் மற்றுமொரு பெரும் வஞ்சகமாகும். பொது சிவில் சட்டம் எனும் ஒற்றைத்தன்மையை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியில், அவர்களது மலிவான அரசியலுக்காகப் பெருஞ்சிக்கலாக ஊதிப் பெரிதாக்கப்பட்ட இவ்விவகாரத்தில், நீதிமன்றமும் அவர்களது தரப்பை ஏற்றுத் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தருகிறது. இந்நாட்டின் குடிமக்கள் அவரவர் தங்களது விருப்பத்தின்படி, தங்களுக்குரிய மத வழிபாட்டு முறைகளைப் பின்பற்றவும், மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கவுமாக இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் தனியுரிமைக்கோட்பாட்டுக்கு இது முற்றிலும் முரணானதாகும்.

சீக்கிய இன மக்கள் தங்களது மத வழக்கப்படி, தலைப்பாகை அணிந்துகொள்ளவும், கிர்பான் எனும் கத்தியை வைத்துக்கொள்ளவுமாக முறையே, இராணுவத்திலும், பாராளுமன்றத்திலுமே தனிவிதிகள் வகுக்கப்பட்டு, அவர்களுக்கென விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு, அவர்களது நம்பிக்கைக்கும், வாழ்வியல் முறைக்கும் இந்நாட்டில் இடமளிக்கப்பட்டு வரும் நிலையில், இசுலாமிய மக்களுக்கு மட்டும் முத்தலாக், பாபர் மசூதி, ஹிஜாப் உடை என எல்லாவற்றிலும் இரண்டகம் விளைவிக்கப்படுவது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மையாகும். ஆகவே, கல்விக்கூடங்களில் ஹிஜாப் உடை அணிய கர்நாடக மாநில அரசு விதித்திருக்கும் தடையை அங்கீகரித்து, அம்மாநில உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன். இது இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியெனக்கூறி, அவர்களது பக்கமிருக்கும் நியாயமும், அறமும் வெல்லத் துணைநிற்பேனென உறுதியளிக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola