மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகர 23வது மாநாடு கடலூரில் உள்ள சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .இதில் பங்கேற்ற கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் கடலூர் நகர 23வது மாநாடு நடைபெற்றது, பின்னர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தெரிவிக்கையில், சீமான் பாஜகவின் ஊதுகுழலாக மாறி இருக்கிறார், தமிழா திராவிடமா எனும் விவாதத்தை எழுப்பிய பொழுதும் சரி தற்பொழுது நூறு நாள் வேலை திட்டம் குறித்து கூறியதும் சரி இவை எல்லாம் மத்திய அரசின் செயல்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கும் செயலில் தான் சீமான் ஈடுபட்டு வருகிறார் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டு ராஜகண்ணு என்கிற ஒரு ஆதிவாசி அடித்து கொல்லப்பட்டார், அதற்கென மாவட்டம் முழுவதும் சிபிஎம் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சந்துரு அவர்களின் மூலமாக வாதாடி பாதிக்கப்பட்ட ஆதிவாசி குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டது, இந்த உண்மை சம்பவத்தை கொண்டு ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு விதமான கதைகள் திரைப்படங்கள் ஆக வெளி வந்துகொண்டு இருக்கும் சூழலில்
ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிரான இதுபோன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இதுபோன்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை கருவாக கொண்டு சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் படங்களை பொதுமக்கள் மிகுந்த வெற்றிபெற செய்ய வேண்டும்.
பின் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஊழல் செய்பவர்கள் நிச்சயம் தண்டனைக்குரியவர்கள், மேலும் அதிமுக ஆட்சி காலங்களிலேயே சில அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது ஆதலால் தவறு செய்திருந்தால் அவர்கள் நிச்சயம் தண்டனையினை அனுபவிக்க வேண்டும்,
மேலும் கண்ணகி முருகேசன் ஆணவ படுகொலைக்கு கடலூர் நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம், இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளம் காதல் தம்பதியினர் சாதியின் பெயரால் ஆணவ படுகொலை செய்யப்படும் செய்திகளை வாரத்திற்கு ஒரு முறை கேள்விப்படுகிறோம், இவ்வாறு சாதியின் பெயரால் படுகொலை செய்வது கண்டனத்திற்கு உரியதாகும். இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.