இந்தியாவிற்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுவது. ஆனாலும் இந்தியை தேசிய மொழி என்று தீவிரமாக நம்பும் சிலர் அதை பிறரிடம் திணிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமே இந்தியாவில் இதுவரை இந்தியை ஏற்றுக்கொள்ளாமல் மீசையை முறுக்கி கொண்டு நிற்கிறது. தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்டம் கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. இந்தி தேசிய மொழி கிடையாது, அதை கற்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒவ்வொரு மாநிலங்களும் இப்போதுதான் தமிழ்நாட்டை பின்பற்றி குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. ஆனாலும் ஆங்காங்கே முடிந்த அளவு மத்திய அரசு இந்தியை கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறது. அதேபோல் சில தனியார் நிறுவனங்களும், விமான சேவை நிறுவனங்களும் கூட அந்தந்த மாநில மக்களின் தாய் மொழியில் சேவைகளை வழங்காமல் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் சேவையை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது நிறைய சர்ச்சைகளும் ஏற்படுவது உண்டு. அப்படித்தான் தற்போது உணவு டெலிவரி செய்யும் சோமேட்டோ(Zomato) நிறுவனம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. 



தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு உணவு முழுமையாக கிடைக்காமல் பாதி பொருட்கள் மட்டுமே வந்துள்ளது. பொதுவாக இது போன்ற சமயங்களில் நமக்கு வந்த உணவு பார்சல் குறித்து சோமேட்டோ சாட் பாக்சில் முறையீடு செய்யலாம். அவர்கள் போட்டோ ஆதாரம் கேட்பார்கள். அதை கொடுக்கும் பட்சத்தில் ரீபண்ட் நமக்கு வரும். ஆனால் சோமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்சில் பேசிய நபர் விகாஷுக்கு ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார். நாங்கள் உணவு நிறுவனத்திடம் பேசினோம், அப்படி தகவல் எதுவும் வரவில்லை, டெலிவரி பாயிடமும் பேசினோம் என்று சோமேட்டோ கஸ்டமர் கேர் அதிகாரி கூறியுள்ளார். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என்றும் சோமேட்டோ அதிகாரி விகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் விகாஷ், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று திமிராக பதில் அளித்துள்ளார். இதை ட்விட்டரில் பகிர்ந்து விகாஷ் சோமேட்டோ நிறுவனத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி பற்றி உங்கள் கஸ்டமர் கேர் அதிகாரி பாடம் எடுக்கிறார். இதுதான் நீங்கள் கஸ்டமர்களை நடத்தும் விதமா என்று கேள்வி எழுப்பினார்.



இந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையம் முழுக்க வைரலான நிலையில் நெட்டிசன்கள் தற்போது சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தி கத்துக்க சொல்ல நீங்கள் யார்? இந்தி யாருக்கு தேசிய மொழி சொல்லுங்கள். எங்கள் மொழியில் முடிந்த சேவை வழங்குங்கள். நீங்கள் இருப்பது எங்கள் மாநிலத்தில். எங்கள் மொழியில் சேவை வழங்க முடியவில்லை என்றால், சேவை வழங்க வேண்டாம். எங்கள் மொழியில் உங்களால் பேச முடியாது என்றால் இங்கே எங்களின் பணத்தில் நீங்கள் வருமானம் ஈட்ட வேண்டாம் என்று கூறி பல நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். தமிழர்கள் மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்தவர்கள், வங்காளிகள், மலையாளிகள் கூட இதில் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. தற்போது விகாஷுக்கு பதில் அளித்துள்ள சோமேட்டோ நிறுவனம். ஹாய் விகாஷ். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் இதை உடனே விசாரிக்கிறோம். உங்களுடைய மொபைல் நம்பரை தனிப்பட்ட மெசெஜில் அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று சோமேட்டோ நிறுவனம் அவரிடம் கேட்டுள்ளது.


இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் அறிவித்துள்ளது சோமாட்டோ...