எம்.ஜி.ஆரின் நிழல், எம்.ஜி.ஆருக்கு எல்லாமுமாக இருந்தவர் என்று கூறப்பட்டவர், அதிமுக ஆட்சி அமைந்தபோதும், ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக இருந்து பணியாற்றி, தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஆர்.எம்.வீ என்ற ஆர்.எம்.வீரப்பன்.


அரசியல் பார்வையாளர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு, பழைய அதிமுக தொண்டர்களுக்கு, திரைப்படத்துறையினருக்கு ஆர்.எம்.வீரப்பன் யார் என்பது தெரிந்தாலும், இன்றுள்ள இளைஞர்களுக்கு ஆர்.எம்.வி ’மறு அறிமுகம்’ஆனது ‘தலைவி’ படம் மூலமாகதான். அதில், எம்.ஜி.ஆரின் விசுவாசியாக வலம் வந்த அவரின் கதாப்பாத்திரம் பலரின் கவனத்தை பெற்றது.



தலைவி படத்தில் ஆர்.எம்.வீ யாக நடித்த சமுத்திரகனி


கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி தன்னுடைய 95வது பிறந்தநாளை கொண்டாடிய ஆர்.எம்.வீரப்பனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக அவரது தி.நகர் இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், பல ஆண்டுகளாக அரசியல் குறித்தும் அதிமுக பற்றியும் கருத்து தெரிவிக்காமல் இருந்த ஆர்.எம்.வீ. தற்போது தன்னுடைய மவுனத்தை கலைத்து ‘Times of India’ நாளேடுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.



ஆர்.எம்.வீக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்


அதில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துபோயிற்று, ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு அந்த கட்சி அதிமுக-வாக இல்லாமல், ஜெயலலிதா திமுகவாகவே மாறிப்போனது என உடைத்து பேசியிருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.


அதிமுகவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை


ஜெயலலிதாவிற்கு மறைவுக்கு பிறகான தற்போது உள்ள அதிமுகவிற்கு இனி அரசியலில் எதிர்காலம் கிடையாது எனவும் அதிரடியாக பேட்டி கொடுத்துள்ள ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு தான் ஏன் ஜானகி அணியை ஆதரித்தேன் என்றும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், தான் ஜானகி அம்மாளை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்று கூறியதாகவும், ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை ஜானகி அம்மாள் கடைபிடித்தால் எம்.ஜி.ஆரின் பெயர் கெட்டுப்போய்விடும் என்பதற்காக அதையும் தவிர்க்க சொன்னதாகவும் கூறியுள்ள ஆர்.எம்.வீ. தான் எப்போதுமே ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையிலேயே இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதாவுடன் இணைய சசிகலா கணவர் என்.நட்ராஜனே காரணம்


ஆனால், 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்ற பிறகு அவரது அமைச்சரவையில் தான் சேர்வதற்கு காரணமாக இருந்தவர் சசிகலாவின் கணவர் என்.நட்ராஜன் தான் என்றும், கட்சியின் நலனுக்காக நானும் ஜெயலலிதாவும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று, எங்கள் இருவரையும் அழைத்து அவர் வலியுறுத்தி பேசியதாலேயே தான் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்தேன் எனவும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளர் ஆர்.எம்.வீரப்பன். சமரசத்திற்கு பிறகு ஜெயலலிதா போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து தன்னுடைய காரிலேயே தன்னை அதிமுக அலுவலகம் அழைத்து சென்றதையும் நினைவு கூறியுள்ளார்.



மறைந்த எம்.நடராஜன்


வெளியேற்றப்பட்டது ஏன்..?


தான் ஜெயலலிதாவுடன் இணக்கமாக சென்று கட்சி நலனுக்காக அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டாலும், தனக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது என்றும், அதன் ஒரு பகுதியாகதான் அதிமுக அரசுக்கு எதிராக ரஜினி பேசியபோது நான் மேடையில் இருந்தேன் என்ற காரணத்தை சொல்லி, என்னை கட்சியை விட்டு 1995ல் ஜெயலலிதா நீக்கினார் எனவும் போட்டு உடைத்துள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.


 



ஆர்.எம்.வீரப்பனுடன் ரஜினி


 அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை


கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, அதிமுக வெற்றி பெற்ற இடங்களுக்கு காரணம், எம்.ஜி.ஆர் விதைத்து சென்ற விதைகளே தானே தவிர, இப்போதுள்ள தலைவர்கள் இல்லை.  ஜெயலலிதா இருந்த வரை பணத்தால் கட்சியை நடத்தினார். ஆனால், தற்போது உள்ளவர்கள் அதையும் செய்ய துணியவில்லை. இதன்பிறகு அதிமுகவிற்கு அரசியலில் எதிர்காலமே கிடையாது ; இனி வரும் தேர்தல்களில் அதிமுகவால் வெற்றி பெறவே முடியாது.



முதல்வர் மு.க.ஸ்டாலின்


 திமுகவை எதிர்க்க தமிழ்நாட்டில் யாருமில்லை


காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளால், பல மாநிலங்களில் பாஜக வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஆர்.எம்.வி. ஆனால், அது தமிழ்நாட்டில் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக, அண்ணா நிறுவிய திமுக போல் முழு பலத்துடன் உள்ளது என்றும், திமுகவை தற்போது எதிர்க்க தமிழ்நாட்டில் எவரும் எந்த கட்சியும் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார். அப்படி திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால் புதிதாக ஒருவர் முளைத்து வரவேண்டும் என்றும் ஆர்.எம்.வீ. பேசியுள்ளார்.