பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க ஏதுவாக ஈரோட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  


குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (6.12.2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொடங்கி வைத்துள்ளார். இவ்வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல் மட்டுமன்றி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளுக்கும், அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அண்மையில், பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண்கள், பெண் குழந்தைகள் வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது, குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வுக்காக அடுத்தக் கட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில் தான், பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க ஏதுவாக ஈரோட்டில் அரசுப் பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


பாலியல் தொந்தரவு குறித்து மாணவியர் புகார் தெரிவிக்க வசதியாக கல்வி உதவி வழிகாட்டி மையம், குழந்தைகள் உதவி எண் குழந்தைகள் நலக் குழுமத்தின் வாட்ஸ் அப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில்,  போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திண்டலில் நடந்தது. 
இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 420-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 


இந்தக் கூட்டத்தில் போக்சோ சட்ட பிரிவு குறித்தும், பள்ளியில் வீட்டில் பொது இடங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து ம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் 


மாணவ மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொந்தரவு குறித்து தங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் தயங்காமல் தகவல் தெரிவிக்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளியில் புகார் பெட்டி பயன்பாடு, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அல்லது தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். அதற்காகவே அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.


அதில் மாணவ, மாணவியர் தங்கள் பிரச்சனையை குறித்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகார் பெட்டிக்கும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மாவட்ட கல்வி அலுவலகத்திலும் மற்றொரு சாவி அந்தந்த பள்ளிகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் இருக்கும். புகார் பெட்டி குறிப்பிட்ட நாட்களில் ஒருமுறை திறக்கப்படும். புகார் பெட்டியில் யார் மீதாவது புகார் இருந்தால் அது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.


ஈரோட்டில் அனைத்து பள்ளிகளிலும் பாலியல் தொந்தரவு புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இது தமிழக முழுவதும் விரிவடைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நல செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.