அது 2020ம் ஆண்டின் பரபரப்பான கொரோனா காலம். சுகாதாரத் துறை செயலாளராக செயல்பட்டு வந்த பீலா ராஜேஷை வணிகவரித்துறைக்கும் , வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறைக்கும் ஜூன் 12ம் தேதி மாற்றம் செய்யப்பட்டனர். இன்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதியில் அதாவது ஜூன் 12ல் ஜெ ராதாகிருஷ்ணன் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக மாநிலத்தின் ஆட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. போலீஸ் உயரதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் என அனைத்து துறையிலும் அதிகாரிகள் மாற்றம் இருக்கும். அப்படித்தான் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். அந்த மாற்றத்தில் இடம்பெறதவராக இருந்தார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன். அதற்கு முக்கியமான காரணம் அது பரபரப்பான கொரோனா காலம்.
நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா, ஆக்ஜிசன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் பெட் இல்லாதது என தமிழக சுகாதரத்துறை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியிலிருந்தே கொரோனாவின் போக்கை அருகில் இருந்து கவனித்து அதற்கு ஏற்ப தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த ராதாகிருஷ்ணனை மாற்றுவது சரியாக இருக்காது என யோசித்த புதிய அரசான திமுக அவரை அப்படியே தொடர வைத்தது.
பீலா ராஜேஷ்..
கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் தமிழகத்தின் சுகாதாரச் செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். நாளுக்குநாள் கொரோனா அதிகரிக்க அதிகரிக்க தமிழ்நாடே திக்குமுக்காடியது. அந்த நேரத்தில் அனுபவம் அதிகம் வாய்ந்த சுகாதாரத்துறை செயலர் தேவைப்பட்டார். அரசின் கவனம் ராதாகிருஷ்ணன் மீது விழுந்தது. அப்போது வருவாய் நிர்வாக ஆணையராக இருந்தார் ராதாகிருஷ்ணன். 2012 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி அரசின் கவனத்தையும், மக்களின் நன்மதிப்பையும் பெற்ற ராதாகிருஷ்ணனை இக்கட்டான நிலையில் பணியமர்த்துவது சரியாக இருக்கும் என நினைத்தது அரசு. உடனடியாக பீலா ராஜேஷை இடமாற்றம் செய்து ராதாகிருஷ்ணனை பணியமர்த்தியது. அன்று 2020ம் ஆண்டு ஜூன் 12ம்தேதி.
நாகை கலெக்டராக இருந்தது முதலே பம்பரமாய் சுழலும் ராதாகிருஷ்ணன் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக கையாண்டார். தொடர்ந்து ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தினம் தினம் ப்ரெஸ் மீட், மக்களுக்கு அறிவுறுத்தல்கள் என சின்ன சின்ன விஷயங்களையும் கவனத்தில்கொண்டு கொரோனாவை சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ராதாகிருஷ்ணன். அந்த அதிரடி வேலைதான் திமுக ஆட்சி மாறியபோதும் ராதாகிருஷ்ணனை துறை மாற்றாமல் வைத்திருக்க உதவியது.
கொரோனா கட்டுப்பாட்டில் தனக்கு இருந்த அனுபவத்தை வைத்து இரண்டாம் அலையையும் சமாளித்தார் ராதாகிருஷ்ணன். தற்போது கொரோனா தாக்கம் குறைந்து சுகாதாரத்துறை சற்று மூச்சுவிட்டு வருகிறது. இந்த நேரத்தில் தற்போது மீண்டும் துறைமாற்றம்செய்யப்பட்டுள்ளார் ராதாகிருஷ்ணன். சரியாக 2020 ஜூன் 12ல் சுகாதாரத்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்ட ராதாகிருஷ்ணன் 2 வருடங்கள் கழித்து அதே நாளான ஜூன் 12ம் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.