கன மழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 23) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் இலேசான மழை முதல் கன மழை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.  உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் மழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை,விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேனி மாவட்டத்தில் மட்டும் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காரமடை ஒன்றியத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் 193 பள்ளிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


சென்னையில் தொடரும் மழை 


சென்னையில் கடந்த 3 தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இன்றும் விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.