கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, ’’1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்துடன் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். முழுமையாக வாசிக்க: TN Board Exam 2023: 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எப்போது?- 2023 தேர்வு தேதிகளை அறிவித்த அரசு!
கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது.
மே 14 முதல் கோடை விடுமுறை
இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 2ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.
எனினும் பள்ளிகளை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
திட்டமிட்ட தேதியில் திறப்பு
இந்த நிலையில் ஏற்கெனவே அறிவித்தவாறு, ஜூன் 13ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்கலாம்: Saturday Leave: இனி லீவுதான்! எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு விடுமுறை- அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்