தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனமழை அபாயம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தஞ்சை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வரும் விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களுக்கும். விட்டு விட்டு மழை பெய்துவரும் திண்டுக்கல் மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, தருமபுரி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுவையிலும் கனமழையின் தாக்கம் நீடிப்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்