சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா அதிமுகவுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்துவார் என்று அவரது அபிமானிகளால் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தல் சமயத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
ஆனால், தேர்தல் முடிந்த பிறகு தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார் அவர். அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்திய அவர் அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்றார்.
அதனையடுத்து எம்ஜிஆர் நினைவு இல்லம், ராமாவரம் தோட்டம் இடங்களுக்கு சென்று அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். அத்தோடு, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் கல்வெட்டையும் திறந்துவைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், “நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான் நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது.
மக்கள் நலனில் நாம் அக்கறை காட்டாவிட்டால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டும். மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியல் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும்” என்று பேசி அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டினார்.
தேவர் ஜெயந்தி விழாவுக்கு வர அனுமதிக்கக்கோரி அவர் அளித்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்.
அரசியல் பிரவேசத்தின் உச்சக்கட்டமாக அதிமுக கொடி கட்டிய காரில் தென் மாவட்டங்களுக்கு பயணத்தையும் அவர் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரை சந்திக்கவிருக்கிறார்.
இதற்கிடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்று கூறியது ஆச்சரியத்தை உருவாக்கியது.
இந்நிலையில் பன்னீரின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவதே எங்களது இலக்கு. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ .பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான். அவர் எப்போதுமே நியாயமாகத்தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திக்க புறப்படும் சசிகலா.. ஒரு வார ப்ளான் ரெடி...