சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை ஆன சசிகலா அதிமுகவை அதிரடியாக கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தேர்தல் சமயத்தில், அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன் என கூறி அவரது அபிமானிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.


ஆனால், தேர்தலுக்கு பிறகு அவரது நடவடிக்கைகளில் அரசியல் வாசம் தூக்கலாகவே இருக்கிறது. அதிமுக ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் ஆவதையொட்டி பொன்விழா மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


சசிகலாவோ தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி ஜெயலலிதா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திவிட்டு அதிமுகவை ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் காப்பாற்றுவார்கள் என்றார்.




மேலும், இதன்பிறகு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்ற சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் கல்வெட்டையும் திறந்து வைத்தார். 


அதன் பிறகு உரையாற்றிய சசிகலா, “அதிமுக என்னும் ஆலமரத்திற்கு எம்ஜிஆர் விதையாக இருந்தார். புரட்சித் தலைவி அம்மா மழையாக பொழிந்தார். அதனால் தான் கழகம் விருட்சமாக வளர்ந்தது. இன்று,நமது கழகத்துக்கு பொன்விழா ஆண்டு. இன்று கழகம் ஆட்சிக் கட்டில் இருந்திருந்தால், கட்சியை உருவாக்கியத் தலைவர்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். சற்று, எண்ணிப் பாருங்கள்.




நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான் நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது.  மக்கள் நலனில் நாம் அக்கறை காட்டாவிட்டால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டும். மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியல் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும்" என்று கூறி பரபரப்பை கூட்டினார்.


இதனையடுத்து தேவர் ஜெயந்தி விழாவுக்கு வர அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்றே அவர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு கடிதமும் எழுத ஆரம்பித்துள்ளார்.




சூழல் இப்படி இருக்க அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி பேசி முடிவெடுப்பார்கள் என்றார். ஓபிஎஸ்ஸின் இந்தப் பேச்சு சசிகலா அதிமுகவுக்குள் வருவதற்கு அவர் சிவப்பு கம்பளம் விரிக்க தயாராக இருக்கிறார் என்பதையே உணர்த்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


ஆனால் சசியை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். 


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களை சந்திக்க சசிகலா இன்று சென்னையிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா தஞ்சையில் நாளை நடக்கும் டிடிவி தினகரன் மகள் வரவேற்பில் கலந்துகொள்கிறார்.


இதனையடுத்து மொத்தம் 25 இடங்களில் அவர் தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். அதன்படி, 28 ஆம் தேதி மதுரை செல்லும் சசிகலா அங்கு முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு ஆதரவாளர்களை சந்திக்கிறார்.


29ஆம் தேதி தொண்டர்களை சந்தித்துவிட்டு 30ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்றுவிட்டு தஞ்சை திரும்பும் அவர் ஒன்றாம் தேதியும் தொண்டர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அவர் பயணப்படுவார் என தெரிகிறது.


சசிகலாவை அதிமுகவில் ஒரு தரப்பினர் தீவிரமாக எதிர்த்துவரும் சூழலில் கட்சி கொடி கட்டிய காரில் சசிகலா மேற்கொண்டுள்ள பயணத்தால் தமிழ்நாடு அரசியல் களம் தகிக்க தொடங்கியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண