சனாதனம் குறித்து டெல்லியில் விவாதம் நடத்த தயாரா என பா.ஜ.க.-வினருக்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே உள்ள வீராம்பட்டினத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்.பி., ஆ.ராசா பங்கேற்று கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.-க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம். தடை செய்யப்பட்ட அம்பேத்கரின் புத்தகத்தை கொண்டு வந்து பாரதிதாசன் முழங்கப்பட்ட சமத்துவ மண் இந்த புதுச்சேரி. இந்து மதத்தால் எல்லா சாதியினருக்கும் இழிவு இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து தாண்டி வந்துள்ளோம். சனாதனம் என்றால் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுகிறேன். அமித் ஷா அல்லது பாஜகவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள், டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். ஒரு லட்சம் பேர் கூடட்டும். நீங்கள் சனாதனத்தைப் பற்றி பேசுங்கள். யார் சரி என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என்று பேசியுள்ளார்.
” சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால் தான் அமித் ஷா உள்துறை அமைச்சர், நாங்கள் சனாதனம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழிசை ஆளுநர், வானதி சீனிவாசன் வழக்கறிஞர், அண்ணாமலை ஐபிஎஸ். நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வந்து உட்கார்ந்து கொண்டு சனாதனம் பேசுகின்றவர்களுக்கு மனசாட்சி இல்லையா? படித்தவர்களின் அறிவு சமூகத்துக்கு எதிராக செல்லக்கூடாது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் தமிழிசை ஆகியோரின் அறிவு இந்த சமுகத்துக்கு எதிராக செல்லக்கூடாது. நான் திறந்த வெளியில் சொல்கின்றேன்... மோடி, அமித்ஷா, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைவிட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள்.” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் கருத்து
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த தலைப்பே மிகவும் சிறப்பாக இருக்கிறது. ’சனதான ஒழிப்பு மாநாடு’ என்று இருக்கிறது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்கக் முடியாது. கொசு, டெங்கு, காயச்சல், மலேரியா, கொரோனா இதையேல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனதானம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம். ” என்று பேசியிருந்தது பேசுபொருளானது.
வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள்
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “ இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது அனைவருக்கும் தெரியும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஜெரனல் டயரால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை இதுதான்.
அது நிகழ்ந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வருகை தந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என்று கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். விஞ்ஞானி புரூனோவை கிறிஸ்தவர்கள் நடுரோட்டில் வைத்து எரித்துக்கொன்றனர். அப்போது ஆண்டவர் மன்னிப்பு கேட்டார். மனிதனுக்கு மனிதன் பாவம் செய்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர், போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கின்றனர். ஆனால், மணிப்பூரில் பலரை கொன்றுவிட்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்துச் சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். இதனை நியாயப்படுத்தும் அங்குள்ள முதலமைச்சரை நாடாளுமன்றத்தில் மோடி, அமித் ஷா பாராட்டுகின்றனர். நான் கேட்கிறேன், மனிதனுக்கு தவறு இழைத்துவிட்டு மன்னிப்புக்கேட்ட வெள்ளைக்கார்கள், போப் ஆண்டவர் முன்னாள் நீங்கள் தூசுக்கு சமம்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.
”மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும். அப்படி மனிதனை மனிதனாக நேசிக்காத ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கின்ற பாஜக ஆட்சியை தூக்கி எரிவதற்கு நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்" என்று பேசினார்.