சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சாமியார் மீது வழக்கு போடுவது உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் மதிக்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த தலைப்பே மிகவும் சிறப்பாக இருக்கிறது. ’சனதான ஒழிப்பு மாநாடு’ என்று இருக்கிறது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்கக் முடியாது. கொசு, டெங்கு, காயச்சல், மலேரியா, கொரோனா இதையேல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனதானம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம். ” என்று பேசியிருந்தது கடந்த சில நாட்களாக விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இவருடைய கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது மத உணர்வுகளை அவமதிக்கும்படி இருப்பதாக குறிப்பிட்டு அவர் மீது வழக்குகள் தொடரப்படுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க. உறுப்பினர்களுக்கு சில அறிவுரைகளை உதயநிதி ஸ்டாலின் அறிக்கையின் மூலம் வழங்கியுள்ளார். 


எந்த மதத்திற்கும் எதிரியில்லை


” இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. ‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’


” தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட  தி.மு.க., கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.” 


`23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டி


”இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.” என்று சாடியுள்ளார்.


மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றுபவர்


”மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.” என்று எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிறார்.


பணி செய்வதே முதன்மையான கடமை


”சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது.  இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.


நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.


முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.


இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.


என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.