தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், குறுவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை:


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வேளாண்துறை அதிகாரிகள் உடன், தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண் அமைச்சர், துறைசார்ந்த செயலாளர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் தண்ணீரின்றி கருகியதால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும்,  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  அதனை தொடர்ந்து,  டெல்டா மாவட்டத்தில் குறுவை பயிர் சேதம் குறித்தும், குறுவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, டெல்டா மாவட்ட ஆய்வுகளை தீவிரப்படுத்துவது குறித்தும், ஏக்கருக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறுவை சாகுபடி பாதிப்பு ஏன்?


குறுவை சாகுபடிக்காக வழக்கம்போல் கடந்த ஜூன்  மாதம் 12ம் தேதி  மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக ஜூலை மாதத்தில் படிப்படியாக திறந்து விடப்படும் நீரின் அளவு 16000 கனஅடியாக உயர்த்தி, ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக தேவைக்கேற்ப மற்றும் மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வராததால்,  கடைமடை வரை தேவையான தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 


விவசாயிகள் கோரிக்கை:


பெரும் இழப்பையும் சந்தித்துள்ள விவசாயிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதோடு, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பதில் மறு விவசாயம் செய்யவும், சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


அதிகாரிகள் ஆய்வு:


இந்த நிலையில் தான், டெல்டா மாவட்டங்களில் வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விரைந்து சேதம் தொடர்பாக உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிகாரிகள் சமர்பிக்க உள்ள அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரிய இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க உள்ளார். ஏற்கனவே பயிர் காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், குறுவை சாகுபடியால் ஏற்பட்ட பாதிப்பிற்காவது உரிய இழப்பீடு வழங்கப்படுமா என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.