சேலத்தில் அரசு பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். 45 நாட்கள் நடைபெறவுள்ள இந்த அரசு பொருட்காட்சியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, நகராட்சி நிர்வாகத்துறை, அறநிலையத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உட்பட 27 அரசுத்துறை அரங்குகளும், சேலம் மாநகராட்சி, ஆவின் பால் நிறுவனம் உட்பட 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 33 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா பூங்கா அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ சிலை போன்று அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த அரங்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் 62 பேருக்கு 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினர்.



நிகழ்ச்சியில் உரையாற்றிய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன், சேலம் அரசுப் பொருட்காட்சியானது தொடங்கி வைக்கப்பட்டு வருகின்ற 20.10.2023 வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளன. இப்பொருட்காட்சியினைத் தொடங்கி வைத்துள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேத்த நாள் முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டப்பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளீட்ட பல்வேறு திட்டங்கள் முத்தாய்பாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள் செயல்பாடுகளை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன, இப்பொருட்காட்சிகளில், அரசின் திட்டங்களும், சாதனைகளும் சிறந்த முறையில் மக்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த 2022 ஆண்டு நடைபெற்ற சேலம் அரசுப் பொருட்காட்சியினை 1,58,480 பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர் இதன் மூலம் அரசுக்கு ரூபாய் ஒரு கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார்.



அதன்பின் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, ”சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டு மற்ற ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று, இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலத் திட்டப் பணிகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இப்பொருட்காட்சியினைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினரை எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 45 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பொதுமக்களை கவரும் விதமாக பனிக்கட்டி உலகம், 3டி திரையரங்கம், ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. தினசரி மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசு பொருட்காட்சியை கண்டு களிக்க வருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.