சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஏரோஸ் பேஸ் என்ற விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட அவர் அங்கு "Make in Tamilnadu" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதன் அடிப்படையில் போயிங் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் ரூ.96 கோடி மதிப்பில் கட்டப்பட்டு அரசு சட்டக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அமைக்கப்படும்படி வலியுறுத்திய அமைச்சர், விரைவில் முதலமைச்சர் சட்டக்கல்லூரியை திறந்து வைக்க உள்ளதாக பணிகளை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் சேகோ பொருட்களை தரத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறும் ஆய்வகத்தை பார்வையிட்ட அவர், சேகோ சர்வ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சேகோ சர்வ் நிறுவனத்தில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இருந்த இடத்திற்கே தேடிச் சென்று பார்த்த அமைச்சர் கே.என்.நேரு, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, காமராஜரின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கல்வி வளர்ச்சி நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை அவர் வழங்கி வாழ்த்தினார். விழாவில் பேசிய அவர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். காமராஜர் காலத்தில் பள்ளிகளில் இலவச கல்வி, கலைஞர் காலத்தில் கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த வழியில் தற்போது முதல்வர் ஸ்டாலின் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்டார். மேலும், காலை நேர உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்விக்காக யார் பாடுபட்டார்கள் என மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காமராஜர் நேர்மையான நியாயமான ஆட்சி நடத்தினார். பள்ளிக்கு அவர் அளித்த முக்கியத்துவத்துடன் பல்வேறு தொழிற்சாலைகளையும் உருவாக்கினார். உயர்கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு துறைகள் இருந்தாலும் முதலமைச்சர் பள்ளிகல்வித்துறைக்கு முதன்மை முக்கியத்துவம் அளித்து ரூ.34 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அவர்.
இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் நடைபெற்ற செஸ் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என். நேரு, சேலம் மாவட்டம் ஆட்சியர் மற்றும் மாணவிகளுடன் இணைந்து செஸ் விளையாடினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்