சென்னை, பெங்களூரு, டெல்லி  உள்ளிட்ட நகரங்களில் மின்னணு வர்த்தக நிறுவன, விநியோக வாகனங்களால் காற்று மாசு அதிகரிக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் காற்று மாசுவை கட்டுப்படுத்த பெரும் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது என சர்வதேச ஆய்வு முடிவுகள் கூறுகிறது.


காற்று மாசில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற 6 பெரும் நிறுவன விநியோக வாகனங்களின் பங்களிப்பு 66 விழுக்காடாக இருக்கிறது என இந்த ஆய்வில் தெரிகிறது. இந்தியா, ஐரோப்பியா, வடக்கு அமெரிக்காவில் உள்ள 90 வர்த்தக விநியோக நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.


இதில் மின்னணு வர்த்தக துறையில் உள்ள சங்கிலி தொடர்புகளில், வாடிக்கையாளர்களிடம்  பொருட்களை கொண்டு சேர்க்கும் முக்கிய பணியில்  விநியோக வாகனங்கள் 24 மணி நேரமும் ( Last Mile Delivery) ஈடுபடுகின்றன.


2030ல் இந்தியாவில், மின்னணு வர்த்தக சந்தையின் மதிப்பு $350 பில்லியனை எட்டும் என்று  கணக்கிடப்பட்ட நிலையில், சுற்றுச்சூழலில் இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமாகிறது என ஆய்வின் தரவுகள் கூறுகிறது.


Stand.earth ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளை Clean Mobility Collective என்ற அமைப்பு சான்றளித்துள்ளது. UPS, FedEx, Amazon, DTDC, Flipkart (Ekart), DHL, போன்ற முன்னணி நிறுவனங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதில் இந்த 6 நிறுவனங்களுக்காக இயக்கப்படும் விநியோக வாகனங்களின் கார்பன் உமிழ்வு மட்டும் 4.5 மெகாடன் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இது 10 லட்சம் பெட்ரோல் வாகனங்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கார்பன் உமிழ்வுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த கார்பன் உமிழ்வை குறைக்கவும், பூஜிய உமிழ்வு என்ற  இலக்கை எட்டவும், அந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் தற்போது வரை யோசிக்கவில்லை ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது. 


இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்த Stand.earth Research Group அமைப்பின் முக்கிய ஆய்வாளரான ஜார்ஜ் இக்ஸ் கூறும்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் விநியோக வாகனங்களின் கார்பன் உமிழ்வு குறித்து அக்கறை இல்லையென என்று தெரிவிக்கிறார்.


குறிப்பாக, விநியோக வாகனங்கள் மொத்த கார்பன் உமிழ்வில் 6 பெரு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது 66% என்றும் ஜார்ஜ் இக்ஸ் குறிப்பிடுகிறார். சர்வதேச ஆய்வின் அங்கமாக இந்தியாவில் இயங்கும் முக்கிய மின்னணு வர்த்தக நிறுவனங்களான Amazon, Flipkart, Delhivery, DTDC India, Blue Dart Express, Shadowfax, Ecom Express போன்ற நிறுவனங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதில், விநியோக முகவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில், 50% க்கும் அதிகமான வாகனங்கள் மின்னணு வர்த்தக நிறுவனத்தை சேர்ந்தவையாக உள்ளது. இந்த வாகனங்களே கார்பன் உமிழ்விலும் பெரும் பங்கு வகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு,  நகரங்களில் இயங்கும் விநியோக வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயு, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளை விட அதிமாக உள்ளது. இந்தியாவில், ஒரு பொருளை வாடிக்கையாளரிடம்  கொண்டு சேர்க்க இயக்கப்படும் விநியோக வாகனம்  சராசரியாக 285 கிராம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.


இது சர்வதேச நாடுகளின் சராசரியான 204 கிராம் என்ற அளவில் இருந்து 40% அதிகம் என்றும் இந்த ஆய்வு உறுதி செய்கிறது. இதனால், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று  Clean Mobility அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் தெரிவிக்கிறார்.


இந்தியாவில் வளர்ச்சியடைந்த நிறுவனமாக இருக்கும்  Flipkart, 2030ல் தன்னுடைய விநியோக வாகனங்களை முழுமையாக, மின்சார வாகனங்களாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மின் வாகனங்களின் பயன்பாடை நோக்கிய இந்திய அரசின்  பயணத்திற்கு  மிகச்சிறந்த தொடக்கமாகவும் அமையும் என்கின்றனர். 


மேலும்  நிதி ஆயோக்கின்  ஷுன்யா பிரச்சாரத்தின் நோக்கமான விநியோக துறையில் மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. டெல்லி, மகாராஸ்டிரா போன்ற மாநிலங்கள் விநியோக வாகனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைப்பதற்கான கொள்கைகளையும் வகுக்க தொடங்கியுள்ளது. 


மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக தினசரி இயக்கப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள்,  காற்று மாசை அதிகரிப்பதுடன், சுற்றுச்சுழலையும், மக்களின் உடல் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பூஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை   நோக்கிய பயணத்திற்கும் தடையாக உள்ளதாக கூறுகின்றனர்.


இதை தவிர்க்க, விநியோக நிறுவனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைக்க உரிய இலக்கும்,  திட்டமிடுதலும், அவசியம் என்றும் இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சமாக  பார்க்கப்படுகிறது.


இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள, Head of Business Actions India, Climate Group அமைப்பின் தலைவரான அதுல் முதலியார், மின்னணு வர்த்தக நிறுவங்களின் விநியோக பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால், இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பெரும்பாலும் பலர் கவனிக்க தவறுவதாக குறிப்பிடுகிறார்.


ஆனால் இத்துறையின் அங்கமாக இருக்கும் விநியோக  வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதை பெருமளவு குறைப்பதற்கான நடவடிக்கைகளை பெரிய நிறுவனங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.


அதற்கு வணிக நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதுல் வலியுறுத்துகிறார். பிளிப்கார்ட், 2030 இல் தன்னுடைய விநியோக வாகனங்களை 100% மின் வாகனமாக மாற்றுவதாக இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


மற்ற பெரிய நிறுவனங்களும் இது போன்ற இலக்கை நிர்ணயிப்பதுடன், வெளிப்படைத்தன்மையுடன் அதை நோக்கிய பயணத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.