சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை கண்டுபிடித்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார். மேலும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நகைப்பறிப்பு, கொள்ளை, மற்றும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், நகைகள், செல்போன்கள், வெள்ளிக்கட்டிகள், மற்றும் கள்ளத்துப்பாக்கிகள் ஆகியவற்றை அந்தந்த மாவட்டங்கள் சார்பாக காட்சிப்படுத்தப்பட்டது. இதனை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பார்வையிட்டார். இதில் சேலம் மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 47 லட்சம் ரொக்கம், 100 பவுன் தங்கநகைகள், 40 லட்சம் மதிப்பிலான வைரநகைகள்,10 கிலோ வெள்ளிக்கட்டிகள், 100 செல்போன்கள் காட்சிப்படுத்தப்பட்டது.



நாமக்கல் மாவட்டம் 24 லட்சம் ரொக்கம், 57 சவரன் தங்கநகைகள்,75 செல்போன்கள் காட்சிப்படுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம் குற்ற வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிகள் மற்றும் உரிமம் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 152 துப்பாக்கிகள் மற்றும் தாலி உள்ளிட்ட 22 சவரன் நகைகள்  காட்சிப்படுத்தப்பட்டது. இவற்றை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு பார்வையிட்டார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு, ”சேலம் மாநகரில் தற்போது 40 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வட மாநில கொள்ளை கும்பல் சங்ககிரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது இந்த வழக்கில் சங்ககிரி பெண் காவல் ஆய்வாளர் தேவி மகாராஷ்டிரா சென்று 46 லட்சம் பணத்தை மீட்டு குற்றவாளிகளை கைது செய்து அழைத்து வந்தனர். போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது. சேலம் சரகத்தில் தற்போது வரை 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



கலவரங்கள் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடி படை சேலம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவை குண்டு வெடிப்பு சம்பவம் போன்ற சட்ட-ஒழுங்கு பிரச்சனை சமயங்களிலும், பண்டிகை காலங்களிலும் காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். 


அதன் பின்னர் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வரும் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.