சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மேசை தயாரித்தல், துணி தைக்கும் பணி, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், சிற்றுண்டி தயாரித்தல் போன்று பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. இதற்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் விடுதலையாகும்போது அவர்களிடம் பணத்தை ஒப்படைப்பது வழக்கம். 



இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதிகளை வைத்து "பிரிசன் பஜார்" என்ற பெயரில் பிஸ்கெட், பிரட், பன், காரச் சேவ், மிக்ஸர், முறுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக சிறையில் தயாரிக்கப்படும் பிரட் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளை கொண்டு பிரிசன் பஜாரில் புதிதாக டீ, காபி, முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ், உளுந்த வடை, மசால் வடை, முட்டை போண்டா, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிஸ்கட் வகைகள், லட்டு, பாதுஷா, சமோசா, மைசூர் பாகு, இட்லி, ஊத்தாப்பம், பூரி, பொங்கல், ஆனியன் தோசை, மசால் தோசை, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டு கைதிகள் விற்பனை செய்து வருகிறது. 



தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த 15 நாட்களுக்காக சிறைச்சாலைக்குள் இருக்கும் 20 க்கும் மேற்பட்ட கைதிகளை கொண்டு இனிப்பு, காரவகைகள் தயார் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்றது. குறிப்பாக ஜிலேபி, லட்டு, பாதுஷா, பால் கோவா, அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர், முறுக்கு உள்ளிட்ட காரவகைகள் அனைத்தையும் தயார் செய்து பொதுமக்களின் விற்பனைக்காக கைதிகளால் நடத்தப்படும் கைதிகளின் பஜார் என்ற கடையில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கைதிகளில் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இங்கு விற்பனையாகும் இனிப்பு மற்றும் கார வகைகளில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் விற்பனை துவங்கிய 2 மணி நேரத்திற்குள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலாக விற்பனை நடைபெற்றதால் கைதிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இங்கிருந்து விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள் சிறைக்குள் உள்ள இருக்கும் கைதிகளுக்கும் உறவினர்கள் வாங்கி சென்று வழங்குகின்றனர். இது மட்டுமில்லாமல் வெளியே உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இங்கு கைதிகளால் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் வெளியே ஸ்வீட் கடைகளில் விற்பதை விட பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் நடைபெற்ற விற்பனையை சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் துவக்கி வைத்தார். அப்பொழுது காவல் துறை அதிகாரிகளும் ஆர்வத்துடன் இனிப்பு கார வகைகளை வாங்கி சென்றனர்.