நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, சுமார் கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தீபாவளிக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருக்கின்றனர்.


தீபாவளி பண்டிகை:


கடந்த புதன்கிழமை முதல் பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் நிலையில், இன்று அதிகளவில் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். . இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து வெளியேற பிரதான சாலையாக புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மிகவும் முக்கியமான பகுதியாகும். வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த பகுதி தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தில் அளவுக்கு அதிகமாக காணப்படுவது வழக்கம்.


நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்:


இந்த சூழலில், இன்று சிங்கபெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, நோயாளி ஒருவருடன் மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் மற்ற வாகனங்களாலும் வழிவிட இயலவில்லை. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் ஆம்புலன்சை விரைவாக ஓட்ட சிரமம் ஏற்பட்டது.  இருப்பினும், அவர் ஆம்புலன்சை தன்னால் முடிந்த வரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.


நாளை சனிக்கிழமை என்பதாலும், நாளை மறுநாள் தீபாவளி என்பதாலும் இன்று அதிகளவில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிரக்கும் பொருட்டு கோயம்பேடு மட்டுமின்றி கே.கே.நகர், தாம்பரம் உள்பட 5 இடங்களில் இருந்து பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.  


நாளையும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் நாளை இந்த சூழல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: பெண்கள் தமிழக முதல்வருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்


மேலும் படிக்க: Watch Video: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை! ஜனாதிபதி வந்த நேரத்தில் கைவரிசை!