திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 12) கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்கள் மூலமாக பயணப்பட்டு வருகின்றனர். இதனால் சாலைகளில் வாகனங்களின் அணிவகுப்பு என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. வழக்கமான வேகத்தில் இல்லாமல் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு போலீசாரும் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பேருந்து விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அந்த மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரின் உடைத்துக் கொண்டு சாலையின் மறுபுறம் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 


சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கிருத்திகா, ஆந்திராவை சேர்ந்த அஜித், வாணியம்பாடியைச் சேர்ந்த பெரோஸ், அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, தனியார் பேருந்து ஓட்டுநர் நதீம், ராஜீவ் என 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.