பக்ரீத் தினத்தில் மாநகராட்சி அனுமதி அளிக்காத இடங்களில்  ஆடு மாடுகளை பலியிட தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை ஆடு மாடுகளை பலியிட தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது. 


மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ரங்கராஜநரசிம்மன் என்பவர் தொடுத்த வழக்கில், மாநகராட்சி அனுமதி அளிக்காத இடங்களில் சட்டவிரோதமாக ஆடு மாடுகளை பலியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அவர் அளித்திருந்த மனுவில், பக்ரீத் தினத்தில் குர்பனி என்ற பெயரில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை பலியிட தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்த வழக்கை இன்று அதாவது ஜூன் 26ஆம் தேதி விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், ஆர்.சுப்பிரமணியன் , விக்டோரிய கௌரி அமர்வு, பக்ரீத் தினத்தில் மாநகராட்சி அனுமதி அளிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. 


மேலும், பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் அவசர அவசரமாக வழக்கு தொடுத்ததன் காரணம் என்ன எனவும், இறுதி நேரத்தில் மனு அளித்தால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல், இந்த மனு  தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


பக்ரீத் எதிரொலியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டுகளை விட 3000 ரூபாய் வரை ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி வருகின்றனர். சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்குவந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.


அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், வியாழக்கிழமைதோறும் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்றது. மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையான இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு, கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி செல்வர். இந்தநிலையில் வருகிற 29-ந்தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக, இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.