தமிழ்நாட்டில் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 7 பேராவது எம்எல்ஏக்கள் ஆக வேண்டும் என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய்யின் அரசியல் வருகை குறித்து விரிவாக பேசிய அவர், "2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். விஜய் வந்திருக்கிறார் அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது.


அந்த கூட்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. காமராஜர், மெரினாவில் கூட்டம் நடத்தும் பொழுது ஒரு லட்சம் பேர் கூடினர். ஆனால், அந்த தேர்தலில் தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோற்றார். கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை.


"1 பிராமணர் கூட இல்லாத நிலை"


தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக vs அதிமுக மட்டும் தான். மற்றவர்கள் யாரும் இல்லை. தாக்கம் என்பது வேறு, ஆட்சியை பிடிப்பது என்பது வேறு. விஜய்க்கு வயது இருக்கிறது. ஸ்டாலின் இப்போது முதலமைச்சராக இருக்கிறார் என்றால் மூன்று முறை தமிழக முழுவதும் சுற்றி இருக்கிறார்.


தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். தெலுங்கர்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்கது. நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்களை என் வீட்டில் இருக்கிறது. வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா கலைஞர் புகைப்படமும் தான்  இருக்கிறது.


அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் நாற்பதற்கு பூஜ்ஜியம் தான் எடுக்க முடியும். அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர். அவர் ஒழுங்கா படிக்கவில்லை என்று தான் அங்கிருந்து வந்தார். இங்க சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்து கட்டி விட்டார்.


"குஷ்பு மாதிரி வர நினைத்த கஸ்தூரி"


தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் போட்டி என்பது அதிமுக மற்றும் திமுகவிற்கு தான். மற்ற கட்சிகள் எல்லாம் ஓரமாக நின்று கூட விளையாடிக் கொண்டிருக்கலாம். விஜயின் வயதிற்கு இன்னும் 6,7 தேர்தல்களை சந்திக்கலாம்.


2010 ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டவன். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும்.


இதை திமுக அறிவித்தால் திமுகவுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எந்த கட்சி அறிவித்தாலும் அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பிராமணர் சமூகத்தை யாரும் வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. சமுதாயத்தில் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.


அதை விட்டுவிட்டு அய்யய்யோ அசைவம் அசைவம் என்று சொல்லக்கூடாது. அவரவருக்கு பிடித்ததை அவரவர் சாப்பிட வேண்டும். எதிர்காலத்தில் குஷ்பு மாதிரி வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கஸ்தூரி பேசியிருக்கலாம். ஆனால், கஸ்தூரிக்கே அது எதிராக திரும்பிவிட்டது" என்றார்.