விழுப்புரம்: விழுப்புரத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் ஆய்விற்கு வருகிறார் என்றவுடன் ஊழியர்கள் கட்டிடத்தின் மேல் உள்ள புற்களை அவசர அவசரமாக அகற்றினர். ஆய்வின்போது கழிவறை பராமரிக்கப்படாமல் இருந்ததை கண்டு அதிகாரிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடிந்து கொண்டார். 


விழுப்புரம் மாவட்டத்திற்கு அரசு திட்டப்பணிகள் அரசு திட்ட பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று திருவெண்ணைநல்லூர் பகுதியில் தமிழ் அறிஞர் கலைஞர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி அரங்கத்தில் விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது பள்ளி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாணவர்களின் வருகை பதிவு, கழிவறை வசதி, உணவுக்கூடம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்தார்.


விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் திடீர் ஆய்வு


இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த உள்ளார். ஆய்வு கூட்டத்திற்கு முன்பாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகேயுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


ஆய்விற்கு முன்பாக துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்து ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் வாயிலில் நீண்ட நாட்களாக கட்டிடத்தின் மேல் இருந்த வளர்ந்த செடிகள், புல்களை ஊழியர்களை கொண்டு அவசர அவசரமாக அகற்றினர்.


பாத்ரூம் ஏன் இவ்வளவு சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது? துணை முதல்வர் கோபம்!


அதனை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பஞ்சு, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பயன்படுத்த கூடிய கழிவறை சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்த போது கழிவறைகள் சுத்தமில்லாமலும் பராமரிக்க படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் சந்துருவிடம் பாத்ரூமில் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள் ஏன் சுத்தம் செய்யவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் . உடனடியாக இதனை எல்லாம் சரி செய்ய வேண்டும் என கடிந்து கொண்டார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் விவசாயிகளுக்கு ஓய்வு வரை தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


கலைஞர் படிப்பகத்தைத் திறந்த துணை முதல்வர்


பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி சாலையில் மாதாகோவில் அருகில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த  கலைஞர் படிப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.