கொஞ்சம் அதிகமாக அவதூறாகப் பேசுபவர்களை 'உங்களுக்கு நாக்கு நீளம்' என்று வசைபாடுவதுண்டு. ஆனால், இங்கே இவருக்கு நிஜமாகவே நாக்கு நீளம்தான். ஆனால், 'கறை நல்லது போல்..' இவரது நாக்கு நீளமும் நன்மையில் முடிந்திருக்கிறது. தனது நீளமான நாக்கை வைத்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்திருக்கிறார் இந்த நபர்.


தம்பிக்கு எந்த ஊரு?


விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்தவர் பிரவீன். 20 வயது நிரம்பிய பிரவீன் பிஇ ரோபோடிக்ஸ் பயில்கிறார். ரோபோடிக்ஸ் படிப்பவர் என்பதால் எப்போதும் இயந்திரத்துடனேயே சகவாசம் கொண்டிருப்பவர் என நினைத்துக்கொள்ள வேண்டாம். இவர் சற்று வித்தியாசமாக ஓவியக் கலையிலும் நாட்டம் கொண்டவர். இவரது ஓவியங்களைப் பார்த்து என்னே கைவண்ணம்! என்று வியக்கக்கூடாது.  என்னே நாவண்ணம்! என்றுதான் வியக்க வேண்டும். ஏனெனில், இவர் தனது நாவால் ஓவியங்களை வரைகிறார். அதுபோல் நாவால் தமிழ் எழுத்துக்களையும் எழுதுகிறார். இதை பாதுகாப்பாகவும் செய்கிறார். வண்ணங்களின் ரசாயனங்களால் உடலுக்குத் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் நாவில் ஓர் உறையை மாட்டிக் கொண்டு படம் வரைகிறார், எழுதுகிறார்.


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அவர் இவ்வாறு நாவால் வரைந்திருக்கிறார். விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற வேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாக இருக்கிறது.


10.8 செ.மீ நீளமான நாக்கு


பெண்களுக்கு நாக்கு நீளும் என விமர்சிப்பவர்களே, அறிவியல் ரீதியாகவே ஆண்களின் நாக்குதான் நீளமானது. வளர்ந்த ஆணின் நாக்கு 8.5 செ.மீ இருக்கும், பெண்ணிக் நாக்கு 7.9 செ.மீ இருக்கும் என அறிவியல் கூறுகிறது.


ஆனால், பிரவீனின் நாக்கு 10.8 செ.மீ நீளம் கொண்டுள்ளது. இது இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இது குறித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில், பிரவீனின் நாக்கு 10.8 செமீ நீளம் கொண்டிருக்கிறது. அவர் தனது நாக்கால் ஒரு நிமிடத்தில் சராசரியாக 110 முறை தனது மூக்கையும், ஒரு நிமிடத்தில் சராசரியாக 142 முறை தனது முழங்கையையும் தொடுகிறார். மேலும், தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் தனது நாக்கால் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் 26 நொடிகளில் எழுதுகிறார்  என்று தெரிவித்துள்ளது.


பிரவீன், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பங்கேற்று ஏற்கெனவே கிராண்ட் மாஸ்டர் பட்டமும் வென்றுள்ளார். தனது சாதனை குறித்து ஊடகங்களிடம் பேசிய பிரவீன், எனது சாதனை இந்திய அளவில் பதிவாகியதில் எனக்குப் பெருமை. இருப்பினும் உலகளவில் எனது திறமைகளை நான் மெய்ப்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அதற்கு தமிழக அரசு எனக்குத் தேவையான உதவிகளை செய்தால் நலம் சேரும். நிதி நெருக்கடியின் காரணமாகவே என்னால் எனது திறமைகளை உலகரங்கில் வெளிச்சம்போட்டுக் காட்ட இயலவில்லை. கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸுக்காக நான் 1330 திருக்குறளையும் எனது நாவால் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.