தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பலத்த காவல்துறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சேலம் மாநகர் கருங்கல்பட்டி பகுதியில் வடதமிழகம் மாநில தலைவர் குமாரசுவாமி தலைமையில்  ஆர்எஸ்எஸ் பேரணி துவங்கியது. 



இந்தப் பேரணியில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று, பிரபாத் வழியாக தாதகாப்பட்டி வரை ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வந்து நிறைவு பெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணி செல்லும் சாலைகள் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஒரே சீராக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அணிவகுத்து நடந்தனர். ஆர்எஸ்எஸ் பேரணியில் அணிவகுத்து நடந்து வந்தவர்கள் மீது மலர்களை தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியில் சாதாரண கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தில் வேலை புரியவர்கள் என பல தரப்பட்ட பிரிவுகளை சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கத்தில் நன்கு பயிற்சி பெற்றவர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.



பின்னர் தாதகாப்பட்டி கேட் பகுதியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பேண்ட் வாக்கியங்களுக்கு ஏற்றவாறு கைகளை அமைத்துக் காட்டினார். அதன்பின் ஆர்எஸ்எஸ் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் வரலாறு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேசினர். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என 1000க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் சீருடை அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டது.