தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு:


தமிழ்நாட்டில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டு இருந்தது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழ்நாடு காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இதை எதிர்த்து,  ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


உச்ச நீதிமன்றம் உத்தரவு:


சில நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. சென்னை உயர் நீதிமன்றம், அனுமதி வழங்கி உத்தரவிட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியது.


இதையடுத்து, தமிழ்நாட்டில் 45 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. அதன்படி, விழுப்புரத்தில், மாலை 3 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ள பேரணி, நான்குமுனை சந்திப்பு, பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம், காந்தி சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது. 


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வரும் பேரணி:


இதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேரணி செல்லும் இடங்களில், மோப்ப நாய் உதவியுடன் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.


சேலம் கருங்கல்பட்டி பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழகம் மாநில தலைவர் குமாரசுவாமி தலைமையில் பேரணி தொடங்கி நடைபெற்றது. இந்தப் பேரணியில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


சேலம்:


இந்த பேரணி கருங்கல்பட்டி முக்கிய சாலைகள் வழியாக சென்று, பிரபாத் வழியாக தாதகாப்பட்டி வரை ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வந்து நிறைவு பெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணி செல்லும் சாலைகள் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இதற்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இந்தப் பேரணியில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஒரே சீராக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அணிவகுத்து நடந்தனர். ஆர்எஸ்எஸ் பேரணியில் அணிவகுத்து நடந்து வந்தவர்கள் மீது மலர்களை தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். 


கரூர்:


கரூர் - சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் பகுதியில் துவங்கிய அணிவகுப்பு ஊர்வலமானது முனியப்பன் கோவில் வழியாக, வேலுச்சாமிபுரம் பகுதியில் நிறைவடைந்தது. 


ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்தில் வெள்ளை சட்டை, காவிநிற கால் சட்டை கொண்ட சீருடை அணிந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை முன்னிட்டு  நூற்றுக்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம்:


ஆர்.எஸ்.எஸ். இயக்கதின் சார்பில், காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதியான, மூங்கில் மண்டபம், காஞ்சிபுரம் பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், ஹாஸ்பிடல் சாலை, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் சென்றது.