டி.என்.பி.எஸ்.சி தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்வது  தொடர்பான கோப்பை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். பல்வேறு காரணங்கள் கூறியும், தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.   


ஆர்.எஸ்.பாரதி கண்டனம்:


இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, "டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேசந்திரர பாபுவை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.  ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு அரசு சார்பில் உரிய விளக்கம் கொடுத்தும் ஒப்புதல் தரவில்லை. சைலேந்திரபாபு நியமனத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது உள்நோக்கம் கொண்டது. அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்காகவே சைலேந்திரபாபுவுக்கு நியமனம் அளிக்கப்படுகிறது. கலைஞர் போன்று சமூகநிதி  அடிப்படையில் சைலேந்திரபாபுவை முதலமைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்தார். தம்முடைய ஆட்சியில் சமூக நீதியை எப்போதும் நிலைநாட்டியவர் கலைஞர்.


கலைஞருடைய வழியில் தான் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை தேர்வு செய்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.  நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக வரவில்லை. எனவே சமூகநீதி நோக்கத்தோடு சைசேலந்திர பாபு நியமித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக நிராகரித்துள்ளார். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்த முயற்சி செய்கிறார்.  இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு மத்திய அரசு இருப்பது எந்த வகையில் நியாயம்” என்றார். 


”நாடார் ஒருவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக வருவதை மறுக்கிறார்"


மேலும், ”இதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண்டும்.  டிஎன்பிஎஸ்சி தலைவர் விவகாரத்தில் ஆளுநர் மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் ரவி தன்னுடைய நடவடிக்கைக்கான விலையை தர நேரிடும். தன்னுடைய வேலைகளை தவிர பிற வேலைகளை மட்டுமே ஆளுநர் செய்து வருகிறார். அனைவரும் 'சென்னை டே' என்று கூறும்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டும் ’மெட்ராஸ் டே’ என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக பாடத்திட்டங்கள் குறித்த பல்கலைக்கழங்களுக்கும் கடிதம் எழுதுகிறார். 


தமிழ்நாட்டு மக்களை சீண்டிப் பார்க்கும் நோக்கோடு ஆளுநர் ரவி செயல்படுகிறார். தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கிறார். சென்னை என்று பெயர் மாற்றியதை சொல்ல மறுக்கிறார். இதோடு மட்டுமில்லாமல், தமிழக அரசு பாடநூல்களை  பல்கலைக்கழங்களிலும் படிக்க கூடாது என்று உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார். ஆகவே, திட்டமிட்டு ஒரு குழப்பத்தை உருவாக்குவதற்காக செய்து கொண்டு வருகிறார். இதனை  தமிழ்நாடு மக்கள் பார்த்து கொண்டு இருக்கமாட்டார்கள். காஷ்மீர் முதல் குமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது இந்த ஆளுநர்கள் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என தெரியும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்" என்றார்