Annamalai: ஆளுநர் பதவியை துறந்துவிட்டு தேர்தலில் போட்டியிட வரட்டும் என்று உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் குறித்து பேசியதற்கு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


”யோகி காலில் ரஜினி விழுந்தது தவறில்லை"


திருநெல்வேலியில் பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”அரசியல் அமைப்பு சட்டப்படி நீட் விவகாரத்தில் எதுவும் செய்யமுடியாது. அதில் நடைமுறை சிக்கல் நிறைய உள்ளது. அனைத்து மாநிலத்தையும் ஒப்பிடும் போது தமிழகம் நீட் தேர்வில் சிறப்பாக செயல்படுகிறது. நீட் விவகாரத்தில் திமுகவின் செயல் போகாத ஊருக்கு வழிதேடும் செயல். தமிழகத்தின் அரசியல் நிலை மாறும். இந்த முறை தமிழகத்தின் அரசியல் நிலை என்பதே வேறு. திமுகவின் மாத ஆட்சியும் பாஜகவின் ஆட்சியும் மக்கள் திராசு தட்டை வைத்து பார்த்து வாக்களிப்பார்கள். வேலையில்லாத அரசியல் கட்சிகள் வேலையில்லாத கருத்துக்களை ரஜினி குறித்து பேசுகிறார்கள். யோகி காலில் ரஜினி விழுந்தது எந்தவிதத்திலும் தவறில்லை.யோகி ஆட்சி தமிழகத்தில் வந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும். எனவே அவர் யோகி காலில் அவர் விழுந்தது தவறில்லை" என்றார்.


உதயநிதியால் குரூப் 4 தேர்வு எழுதி முடியுமா?


மேலும், ”நீட் விவகாரத்தில் திமுக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். நீட் தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதையே திமுக சாதனையாக பார்க்கிறது. நீட் விவகாரத்தில் திமுக சிக்கலில் இருப்பதால் உதயநிதி என்னென்னமோ பேசி வருகிறார். வாய் போன போக்கில் மனம் போன போக்கில் பேசி உதயநிதி ஸ்டாலின் சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு UPSC Prelims-ல் தேர்ச்சி பெறுவாரா? அல்லது டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 4 தேர்வுகளில் ஆவது வெற்றி பெறுவாரா? எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவியை விட்டுவிட்டு யூபிஎஸ்சி தேர்வில் நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறட்டும். நான் என்னுடைய அரசியல் பதவியை விட்டு வெளியேறுகிறேன்" என்றார் அண்ணாமலை. 


தொடர்ந்து பேசிய அவர், ”நீட் விவகாரத்தில் கட்சியில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அரசியில் கற்றுக் கொள்ள வேண்டும். அதனை கற்றுக் கொள்ள விட்டுவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  போல் உதயநிதி பேசக் கூடாது. நீட் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை கைகாட்டி விட்டு மு.க. ஸ்டாலின் எஸ்கேப் ஆகிவிட்டார். அரசியலமைப்பு சட்டத்தின்படி எதையும் செய்ய முடியாது. இதனை தெரிந்தும் திமுக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட்  தேர்வை நீக்குவதாக சொல்கிறார்கள். முதலில் காங்கிரஸ் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர போவது கிடையாது. இதில் எப்படி நீட்டை நீக்க முடியும். புரிதல் இல்லாமல் நீட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்” என்றார் அண்ணாமலை.