Rs 6000 Flood Relief: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வெளியான அரசின் விளக்கத்தில், சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்திலும், ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் வட்டங்களிலும் நிவாரணத்தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படும். ஒன்றிய மற்றும் மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகளின் விவரங்களை வங்கி கணக்குடன் தங்களது அருகில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்பங்கள் நியாயவிலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். நிவாரண தொகைக்கு பெறப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தப்பின்னர் அவர்களுக்கான தொகை வங்கி கணக்கிற்கு வந்தடையும். நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக பணம் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தடுக்க டோக்கன் வழங்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என கூறப்பட்டது. மேலும், நிவாரண தொகை வழங்கு அதில் மாவட்ட ஆட்சியர்கள் குறிப்பிட்ட மாநில பேரிடர் நிவாரண நிதி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மழை, வெள்ளம் நிவாரணத்தொகை குறித்து தமிழக அறிவித்ததால், யாருக்கு நிவாரணத்தொகை கிடைக்கும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த சூழலில் அரசாணை மூலம் நிவாரண தொகை பெறுவோரின் தகுதி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நியாயவிலை கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்படுவது குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்ததால் அதற்கான விளக்கத்தையும் அரசாணையில் தமிழக அரசு அளித்துள்ளது.