கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதி வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, "அரசியல் அமைப்பு சட்டத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் ஆளுநர்கள். மாநிலத்தின் முதல் குடிமகனாக இருக்கும் அவர்கள் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது தான் என்ன என்று புரியவில்லை, இதை யாரும் வேடிக்கையாக தான் பார்ப்பார்களே தவிர சீரியஸாக எடுக்க மாட்டார்கள்.


பாதுகாப்பான இடத்தில் இருப்பவர்களே பாதுகாப்பு இல்லை என்று கூறுவது புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்தில் வாழும் மக்கள் ஒன்றை புரிந்து வைத்துள்ளனர். ஆளும் ஒன்றிய அரசு இரு தலை பட்சமாக செயல்படுகிறது என்று. ஒன்று அவர்கள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடு, இன்னொன்று எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடு. இவை இரண்டிற்கும் ஒட்டுமொத்த முரண்பாடை பார்க்க முடிகிறது. ஆளுநர்கள் இப்படி அவதூறு பேசுவது, ஆளுநர்கள் மாநில அரசினுடைய கொள்கைக்கு எதிராக பேசுவது, மாநில அரசின் பல்வேறு சட்ட திட்டங்களுக்கு எதிராக பேசுவதெல்லாம் மிகப்பெரிய தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி வருகிறது. மாறாக தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அதிக அளவில் வரி செலுத்தும் மாநிலங்களாக உள்ளது. இதையெல்லாம் கேட்டு பெற்று தரலாம்.  இப்படி எத்தனையோ நல்ல காரியங்கள் உள்ளது. அதை விட்டு விட்டு சாதாரண அரசியல் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அபத்தமானது, இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் உள்ளது.


சென்னை வெள்ள பெருக்கில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க 5000 கோடி கேட்டா 400 கோடி தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும். நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை, நாங்கள் கொடுத்த பணத்தை கேட்கிறோம். ஜிஎஸ்டி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 10 சதவிதத்திற்கும் குறைவான தொகையை கொடுத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. ஒன்றிய அரசு பாரபட்சம் இன்றி  மாநில அரசு கேட்கும் தொகையை கொடுக்க வேண்டும்" என்றார்.


தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "தென்னகத்து மக்கள் மத சார்பு அரசியலை, ஒருதலைபட்ச அரசியலை, இந்த பிரிவினை அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெலங்கானா தேர்தல் முடிவில் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டு உள்ளது. பாஜக மத்திய இந்தியாவில் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கு இரண்டு மிகப்பெரிய ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர். ஒன்று மதம் என்கின்ற ஆயுதம், இன்னொரு மொழி என்கின்ற ஆயுதம். இவை இரண்டும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. வளர்ச்சியை அல்லது ஒற்றுமையை முன்வைத்து ஒரு அரசியல் நகர வேண்டுமே தவிர மத அடிப்படையில் நகர்வது ஆரோக்கியமானது இல்லை. ஐந்து மாநில தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை விட இந்திய கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளன. இதனால் அச்சப்பட ஒன்றும் இல்லை. இது ஒரு வார்னிங் தான். இவர்கள் எப்படி வியூகம் அமைக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு எதிராக மக்களை திரட்டும் பணியை செய்யக்கூடிய  காலகட்டத்தில் இருக்கிறோம். நிச்சயமாக இந்தியா கூட்டணி வெல்லும். இந்த வெற்றி என்பது ஜன நாயகத்திற்கான வெற்றியே தவிர  வேறு என்றும் இல்லை, அதனால் ஜனநாயக பாதையை விட்டு பிரிந்து செல்ல என்றும் மக்கள் துணை போக மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.