குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு, நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக தேர்தல் வாக்குறுதி:


2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தேர்தலில் அக்கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்கு இந்த அறிவிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு.


வெற்றி பெற்ற பிறகும் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதையடுத்து, தகுதியான நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்து இருந்தார். 


ஈரோட்டில் எதிர்க்கட்சிகள் சாடல்:


இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலின் போது, மீண்டும் உரிமைத்தொகை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. வாக்கு சேகரிக்க வரும் திமுகவினரிடம் உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்புங்கள் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்களர்களிடம் பரப்புரை மேற்கொண்டனர். இது திமுகவிற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.


முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி:


இதனிடையே, திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.


அதன்படி,  ”நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று மிச்சமிருக்கிறது. அதை நான் மறக்கவில்லை. எதிர்கட்சித் தலைவரோ, மக்களோ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். நிதி நிலைமையை முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம். ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்” என ஸ்டாலின் உறுதி அளித்தார். அதோடு, ”வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினை வெளியிட இருக்கிறோம்” என மகளிர் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலும் மீண்டு உறுதிபடுத்தி இருந்தார்.


நாளை பட்ஜெட் தாக்கல்:


இந்நிலையில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் திமுக வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதுடன், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.