திருச்சி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த குழந்த உட்பட 9 பேர் கும்பகோணம் கோயிலுக்கு தரிசனம் செய்ய ஆம்னி காரில் சென்றுள்ளனர். அதேசமயம் திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி விறகுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் காரில் சென்ற அனைவருமே தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. டிரைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள திருவாசி அருகே கார் வந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் பெண், குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு போலீசாரிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த விபத்து காரணமாக திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் கிட்டதட்ட 3 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.