சிறார் ஆபாச வீடியோக்களை உருவாக்குவது, பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பான வழக்கில், தஞ்சாவூரை சேர்ந்த நபரை சிபிஐ கைது செய்துள்ளது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
இண்டர்போல் அமைப்பின் குழந்தை பாலியல் சுரண்டல் தரவுத்தளத்தில் இருந்து, சிறாருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை சிபிஐ கண்டறிந்தது. அதனடிப்படையில் சிறார் ஆபாச வீடியோக்களை உருவாக்குவது, சேகரிப்பது, தேடுவது, பதிவேற்றம் செய்வது, பதிவிறக்கம் செய்வது, விநியோகம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, கிடைத்த புகைப்படங்களை சைபர் தடயவியல் கருவிகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில், சம்பவம் நடந்த இடம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடம் என கண்டறியப்பட்டது. வீடியோக்களை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்ட சிலர் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
குற்றவாளி கைது:
திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தஞ்சாவூரை சேர்ந்த சுமார் 35 வயதான பி.எச்டி படித்து வரும் நபரை சிபிஐ கைது செய்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திருக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை:
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 18வயதுக்கு உட்பட்ட ஒரு மைனர் சிறுமி உட்பட சில பெண்களை, பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, ஆண்களுடன் சேர்ந்து ஆபாச படங்களை பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளார். தங்கள் ஆசைக்காக மேலும் சில மைனர் பெண்களை அழைத்து வராவிட்டால், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவேன் எனவும் பெண்களை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ தீவிரம்:
அதிகரித்து வரும் சிறாருக்கு எதிரான பாலியல் கொடுமைகளின் அச்சுறுத்தலின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளைக் கையாள சிபிஐ 2020 இல் ஒரு சிறப்புப் பிரிவை அமைத்தது. தொடர்ந்து, 2022 இல் இண்டர்போலின் சர்வதேச சிறுவர் பாலியல் துஷ்பிரயோக தரவுத்தளத்தில் சேர்ந்தது. மேலும், 90வது இண்டர்போல் பொதுச் சபை நடத்தப்பட்டது. ஆன்லைன் குழந்தை பாலியல் சுரண்டலைக் கண்டறிந்து விசாரிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு 2022 இல் இந்தியா ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆப்ரேஷன் கார்பன் மற்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்ரேஷன் மேக் சக்ரா ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் 138 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் ஏராளமான மொபைல்கள், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் மூலம் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஒடுக்க சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.