சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்டாலினின் உறுதிமொழிகள்’ என்ற பெயரில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 7 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த ஏழு அறிவிப்புகளும் பொதுமக்களிடையே பெருவாரியான வரவேற்பை பெற்றது.


பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு மற்றும் சமூக நீதி ஆகிய இந்த 7 துறைகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த மு.க.ஸ்டாலின், குறிப்பாக பெண்களுக்கான ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதுதான், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு


மு.க.ஸ்டாலினின் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் அமோக பாராட்டை பெற்றது. திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தத்தான் முதல் கையெழுத்து போடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்குதல், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆகிய 5 திட்டங்களை செயல்படுத்த தனது முதல் கையெழுத்தை முதலில் முதல்வர் ஸ்டாலின் போட்டாரே தவிர, குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை வழங்குவதற்கான கையெழுத்தை அவர் இடவில்லை.


தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், தற்போதைக்கு இந்த அறிவிப்பானது வெளியிடப்படவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், திமுக தரப்பிலோ இது ஸ்டாலின் அறிவித்த 10 ஆண்டு இலக்குகளில் ஒன்றுதான். இதை ஆட்சிக்கு வந்த உடனே செயல்படுத்துவோம் என்று எங்கு சொல்லவில்லை என்று கூறுகின்றனர்.


இது குறித்த மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட, திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.



பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை வழங்க, ஆண்டு கணக்கில் காக்க வைத்துவிடக்கூடாது என்று கோரிக்கை வைக்கின்றனர் குடும்பத் தலைவிகள்.