"ஊருக்கு பஸ் வசதியில்ல ஐயா.. குறுக்க ஒரு பாதை இருந்துச்சு ஆனா தடுப்பணை கட்டியதால் ஆற்றுப்பாதையில் எப்போதுமே தண்ணீர் இருக்குது. அதனால போக்குவரத்துக்கு ரொம்ப சிரமமா இருக்கு.." என்று ஆட்சியரிடம் புலம்பிய மக்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
30 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரிடமும் வைத்துக் காத்திருந்தனர் கருப்பம்பாளையம் கிராமவாசிகள்.
ஆனால் அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அதற்குக் காரணம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி. குணாளன். 2013ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், இந்திய அளவில் 7ஆம் இடத்தைப் பிடித்தவர். இன்று இவரது முயற்சியால் கருப்பம்பாளையம் கிராமவாசிகளுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது. இதுதான் ஆட்சியர் பணியின் மகிழ்ச்சியான தருணங்கள் என்று சிலாகிக்கிறார் பிரபுசங்கர் டி. குணாளன்.
கடந்த ஜூலை 15ம் தேதியன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் டி. குணாளன் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகலை ஆய்வு செய்வதற்காக கருப்பம்பாளையம் சென்றார். அப்போது ஒரு சிறு கும்பல் ஆட்சியர் காரை சுற்றிவளைத்தது. உடனே காரில் இருந்து இறங்கிய ஆட்சியர் அங்கே கூடி இருந்தவர்களிடம் விஷயம் என்னவென்பதை விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள், "ஐயா 30 வருஷமா கேட்டுக்கிட்டு இருக்கிறோம். இதுவரை பேருந்து வசதி கிடைக்காவில்லை" என்று கூறியுள்ளனர்.
கருப்பம்பாளையம் கிராமம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது. கரூரில் இருந்து சற்றே தொலைவில் இந்த கிராமம் உள்ளது. தூரம் காரணமாக மட்டுமே இங்கு போக்குவரத்து வசதி செய்துதரப்படவில்லை. இங்கே 300 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆண்டாண்டு காலமாக இந்த ஊர் மக்கள் பொதுப் போக்குவரத்து வசதிக்காக ஆற்றைக் கடந்தே செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து ஆட்சியர் பிரபு கூறும்போது, "கருப்பம்பாளையம் கிராமம் ஒதுக்குப்புறமாக இருப்பதாலேயே மாட்டுமே இங்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், இந்த ஊர் மக்கள் அமராவதி ஆற்றங்கரையோரம் 2, 3 கிலோமீட்டர் பயணித்து அண்டன்கோயில் எனும் பஞ்சாயத்துக்குச் சென்று அங்கிருந்து கரூருக்கு பேருந்து ஏற வேண்டியிருந்தது. தடுப்பணை இருப்பதால் சில மாதங்கள் மட்டும் ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படும். அப்போது மட்டும் ஆற்றின் குறுக்கே சென்று கரூரை அடைந்துவிடுகின்றனர். இந்தச் சூழலில் தான் அவர்கள் என்னிடம் பேருந்து வசதிக்கு கோரிக்கை வைத்தனர்.
நான் உடனடியாக அலுவலகம் திரும்பி போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் இது குறித்துப் பேசினேன். அவர் லாபம் இருக்காது என்பதால் பேருந்தை இயக்கவில்லை எனக் கூறினார். ஆனால், பொதுப் போக்குவரத்து என்பது லாபம் பொறுத்து இயக்கப்படுவது இல்லை. அதனால் பேருந்து சேவை வழங்கப்பட வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தேன். இப்போது காலை 9.15 மணிக்கு ஒரு பேருந்தும், மாலை 6 மணிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது" என்றார்.
இது குறித்து ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆட்சிப் பணியில் இது ஒரு சிறிய வேலை; ஆனால் கிராமவாசிகளுக்கு இது மிகப்பெரிய வெற்றி" என்று பதிவிட்டுள்ளார். கூடவே சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "கருப்பம்பாளையாம் கிராமத்தில் சாலைகள் நன்றாக இருக்கின்றன. அந்தத் தடத்தில் பேருந்தை இயக்கச் செய்ய வேண்டியது மட்டுமே எனது பணியாக இருந்தது. எனது கவனத்துக்கு இது வந்ததில் மகிழ்ச்சி. இதுபோன்ற சின்னச்சின்ன மகிழ்ச்சி தான் ஆட்சிப் பணியை சுவாரஸ்யமாக்குகிறது " என்றார்.