இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மனிதவளத்தை வலுப்படுத்துவதாக கூறி வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.


மத்திய  அரசின் பல்வேறு துறைகள்/அமைச்சகங்களில் 10 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் நோக்கம் ஆகும். வேலைவாய்ப்பு திருவிழாவின் 14ஆவது கட்டமாக 71,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் ஆவடி உட்பட 45 மையங்களில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஆவடி:


மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, வேலைவாய்ப்பு திருவிழாவின் 14ஆவது கட்டம் இன்று காலை 08.30 மணிக்கு ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் குழு மையத்தில் நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி கலந்து கொண்டு சிறப்பித்தார்.


ஒட்டுமொத்தமாக 413 விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர். பணிக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய இணையமைச்சர், அவர்களுக்கு பணிநியமனக் கடிதங்களை வழங்கி ஊக்குவித்தார். 


வேலைவாய்ப்பு முகாமில் காணொலி மூலம் கலந்து கொள்ள இயலாத விண்ணப்பதாரர்களுக்கு இணையதள இணைப்பும் அனுப்பப்பட்டது. 


சிவகங்கை:


வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையின் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, தபால் அலுவலகம், டிஎஃப்எஸ், இந்திய ரயில்வே போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 45-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.


இந்த விழாவின் போது, புதிதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மா பணி நியமனக் கடிதங்களை  வழங்கினார்.


காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர், இன்று பணி நியமனக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக அவர்கள் இங்கு வந்துள்ளனர் என்றும், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சியில்  உரையாற்றிய மத்திய இணையமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மா, புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது புதுமையான யோசனைகள், திறன்களுடன், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க உதவுவதன் மூலம் நாட்டின் தொழில், பொருளாதார, சமூக வளர்ச்சியை வலுப்படுத்தும் பணியில் பங்களிப்பார்கள் என்று கூறினார்.