காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பத் தொடங்கின.
தாமல் ஏரி - Damal Lake
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை நிரம்பி உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தாமல் ஏரிக்கு திரண்டு வந்து அருவிப்போல வெளியேறி பாய்ந்து ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒகேனக்கல், குற்றாலம், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் காஞ்சிபுரத்திற்கு அருகிலேயே காலங்கள் வழியாக அருவி போல செல்லும் மழை வெள்ள உபரி நீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மக்கள் குழந்தைகள் மகிழ்ச்சி
தாமல் மட்டும் இல்லாது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் காஞ்சிபுரத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தாமல் ஏரியில் குவிந்து வருவதால் திடீர் சுற்றுலா தலமாக மாறி உள்ளது. தாமல் ஏரியை பார்ப்பதற்கும் ஏரி நீரில் குளிப்பதற்கும் பொதுமக்கள் அதிகமாக வரக்கூடிய நிலையில் பாலு செட்டி சத்திரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே தாமல் ஏரி அமைந்து உள்ளதால் நெடுஞ்சாலையில் செல்லும் வெளியூர் வெளி மாவட்ட மக்களும் தாமல் ஏரியை பார்த்து ரசித்துச் சென்று வருகின்றனர்.
திடீர் ஸ்பாட் ஆக மாறிய தாமல் ஏரி
தொடர் விடுமுறை இருப்பதால் தற்போது நீர் நிரம்பி இருக்கும் தாமல் ஏரி திடீர் சுற்றுலா தளமாக மாறி உள்ளது. காலை மற்றும் மாலை வேலைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, தாமல் ஏரியில் குளித்துவிட்டு செல்கின்றனர்.
தொடர்ந்து மக்கள் கூட்டம் அந்த பகுதியில் அதிகரித்து வருவதால், சிறு கடைகளும் அந்த பகுதியில் வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் தாமல் பகுதி குட்டி சுற்றுலா தலமாக மாறி உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கூடுதல் போலீசார் இந்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், அறிவுரைகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.