சென்னையில் போலீசார் சுற்றி வளைக்கையில் தப்பிக்க முயன்று வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்ட 2 ரவுடிகளிடமிருந்து 1 துப்பாக்கி, 10 தோட்டாக்கள், 40 நாட்டு வெடி குண்டுகள் உட்பட ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 


தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல்துறையினர் வியாசர்பாடி பகுதியில் நடத்திய சோதனையில், அதேபகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வெள்ளை பிரகாஷ் மற்றும் அப்பு ஆகியோரை மாநகர காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். காவல் துறையினர் சுற்றி வளைத்ததும், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய ரவுடிகள் இருவடும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் நிலை தடுமாறி வழுக்கி விழுந்த ரவுடிகள் இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1 துப்பாக்கி, 10 தோட்டாக்கள், 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 பட்டாக்கத்திகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல் துறையினர் இவர்கள் மீது சந்தேகமாக இருந்த வழக்குகளை தீவிரமாக விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாட்டின் டிஜிபியாக சைலேந்திரபாபு ஐஏஎஸ் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தமிழ்நாட்டில் ரவுடிகளை தேடித் தேடி பிடிக்கும் பணி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. அதிலும் அவர் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து காவலர்களை நேரடியாகச் சந்தித்து வழக்குகளை கையாள்வது, ரவுடிகளை பிடிப்பது என பல வழிகாட்டுதல்களை வழங்கி வந்தார். அதில் அவர் பேசியதாவது, 


”தமிழ்நாட்டில்  ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் காவல் சரக வாரியாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரவுடிகள், குற்றவாளிகள், கஞ்சா விற்போர்  மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், வேலூர் சரகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது.  இதனால் ரவிடிகளை ஒடுக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது.  அதேபோல் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை கடத்தி விற்பவர்கள்  மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ஆந்திரா மாநிலத்திற்கே சென்று சட்டவிரோதமாக  கஞ்சா கடத்தப்பட்டு வந்த இடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவை கடத்தல் குறித்து பல்வேறு பிரிவு காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போக்ஸோ வழக்குகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பழைய புகார்களையும்  விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாட்டு குற்றவாளிகள் மிகத் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு குற்றவாளிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில்  இல்லை'' என அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.