கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணியளவில் உயிரிழந்தார். 


வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார். பிரபல பரோட்டா காமெடியில் நடிகர் சூரி கடைக்காரரிடம் சென்று பந்தயத்துக்கு நாங்க வரலாமா என்று கேட்பார். அப்போது கடைக்காரர் இவனைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறுவார். அந்த இவனைத் தவிர… அந்த நபர் தான் நடிகர் ஹரிவைரவன். 


இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " 3.12.22 காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


மதுரையை சேர்ந்த இவர் உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த, ஹரி வைரவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நடிகர் மற்றும் நடிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.