புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்கு விநாயகர் கோயில் யானை நடைபயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் உள்ள லெட்சுமி என்ற பெண் யானை உள்ளது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சி தந்த லெட்சுமி காலில் கொலுசு அணிந்தும் முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது. இந்த லெட்சுமி யானை இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதாக இருக்கும்போது கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் லெட்சுமி  வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து  சம்பவ இடத்திலே உயிரிழந்தது.


யானை கிரேன் மூலம் திறந்த லாரியில் ஏற்றப்பட்டு மணக்குள விநாயகர் கோவில் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு ஆளுநர்  தமிழிசை, அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிவித்து, மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலை 3 மணியளவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நேருவீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் லட்சுமிக்கு பிரியாவிடை தரும் வகையில் மக்கள் நின்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.


ஊர்வலத்துக்கு முன்பு சிவவாத்தியங்கள் முழங்க உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ராட்சத எந்திரங்கள் மூலம் லட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு மணக்குள விநாயகர் அர்ச்சகர்கள் கஜபூஜை செய்தனர். பின்னர் லட்சுமியின் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உடற்கூராய்வு செய்தனர். 2 மணி நேரம் இந்த உடற்கூராய்வு நடந்தது. உடற்கூராய்வின்போது லட்சுமியின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது. பின்னர் மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.


லட்சுமியின் நினைவிடத்தில் மணக்குள விநாயகர் கோவில் அர்ச்சகர்கள் வந்து பால் ஊற்றி, மலர்தூவி பூஜை செய்தனர். இதை தொடர்ந்து நேற்று  முதல் பொதுமக்கள் லட்சுமியின் நினைவிடத்தில் பால் ஊற்றி, மலர்தூவி லட்சுமிக்கு பிடித்த உணவுப்பொருட்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் நினைவிடத்தில் லட்சுமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.