கரூர் பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. பெயர்ந்து விழுந்த மேற்கூரை கரூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பலர் கட்டிடங்களை விதிமீறி மாற்றியுள்ளனர். பயணிகள் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதைகள் உள்ளன.





கரூர் பஸ் நிலையத்தில் ஏற்கனவே பெருகிவரும் பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் வசதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது. மேலும், தினந்தோறும் பயணிகள் அதிக அளவில் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். கரூர் பஸ் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் சிமெண்டால் ஆன மேல் கூரை அடிக்கடி கீழே விழுந்துவிடுகிறது.




இதனிடையே மதுரைக்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும், பொதுமக்களும் அவதியுற்றனர். மேலும் பேருந்து நிலையத்தின் சில பகுதிகளில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு கட்டிடங்கள் மிகவும் மோசமாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் பொதுமக்களும், பயணிகளும் இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அதிகளவில் ஒதுங்கி நின்றனர். அந்த நேரத்தில் மேற்படி கட்டிடம் மேற்கூரைகள் கீழே விழுந்திருந்தால் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும்.




தடுப்புகள் அமைக்கப்பட்டன: 


இதனிடையே, கரூர் பஸ் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை உள்ள பகுதியில் மேல் தளத்தில் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பொதுமக்களும், பயணிகளும் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெயர்ந்து விழுந்த மேற்கூரை உள்ள பகுதியை சுற்றியும் தடுப்புகள் (பேரிக் கார்டு) வைத்துள்ளனர்.





எனவே மேற்படி கட்டிடம் இடிந்து உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் கரூர் பஸ் நிலையத்தில் பழுந்தடைந்துள்ள மேற்படி கட்டிட மேற்கூரைகளை சரி செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.